மும்பை:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3-வது லீக் ஆட்டம் மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. கேப்டன் டூ பிளசிஸ், 57 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்சர் உள்பட 88 ரன்கள் விளாசினார். விராட் கோலி 41 ரன்கள் அடித்தார்.
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால், ஷிகர் தவான் இறங்கினர். ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக ஆடினர்.
முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில், அகர்வால் 32 ரன்னில் அவுட்டானார். ஷிகர் தவான் 43 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய பானுகா ராஜபக்ச 43 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ராஜ் பாவா டக் அவுட்டானார். லிவிங்ஸ்டோன் 19 ரன்னில் அவுட்டானார்.
கடைசி கட்டத்தில் ஒடியன் ஸ்மித், ஷாருக் கான் அதிரடி காட்டினர். இறுதியில், பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.