வேலூர்: கோதாவரி – காவிரி ஆறு, தென்பெண்ணை – செய்யாறு, தாமிரபரணி – கருமேனியாறு இணைப்பு போன்ற திட்டங்கள் பரிசிலினையில் உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற வேலை வாய்ப்புத்திட்டம் 2021-22-ன் கீழ் ரூ.1.14 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்க விழா காட்பாடியில் இன்று நடைபெற்றது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார்.
அப்போது அவர் பேசியது: ‘‘தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. இதனால், எவ்வளவு பணம் வருவாய் வந்தது, அதில் எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டது என்ற கணக்கு விவரம் தெரியவில்லை. வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சர்க்கார் தோப்புப்பகுதியில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ.1,000 கோடி மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தனர். ஆனால், அது முழு பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது. இதில், அதிமுக அரசு ஊழல் செய்துள்ளது. இது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்தப்படும்.
ஊழல்வாதிகளுக்கு தண்டனை நிச்சயம். அதேபோல, அதிமுக ஆட்சியில் இப்பகுதியில் 3 பூங்காக்கள் கொண்டு வரப்பட்டன. தற்போது அந்த பூங்கா இடங்களை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்பட்டு பூங்காக்கள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். பூங்காவில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். காட்பாடி சில்க் மில் பகுதியில் உள்ள சமுதாய கூடம் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கிராமப்புறங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் 100 நாள் வேலைத்திட்டம் நகர்ப்புறங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து மாநகராட்சி நிர்வாகத்திடம் கவுன்சிலர்கள் வழங்க வேண்டும். நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் இதுவரை மாநகராட்சிபகுதியில் மட்டும் 4,500 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் பணி செய்ய அதிகாரிகள் தயக்கம் காட்டக்கூடாது. ஆணையர் முதல் அதிகாரிகள் வரை சரியாக வேலை செய்தால் அவர்களுக்கு துணை நிற்பேன். இல்லையென்றால் அந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன். வேலூர் மாநகராட்சி பகுதியில் குடிநீர் குழாய்கள் அமைப்பதினாலும், பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளாலும் பொதுமக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
தரமற்ற சாலைகளில் பயணம் செய்து கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மழைக்காலங்களில் குண்டும், குழியுமான சாலைகளில் பயணித்து பலர் கீழே விழுந்து காயமடைந்து மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. எனவே, மாநகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்துச் சாலைகளும் சீரமைக்கப்பட வேண்டும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் தங்களது வார்டுப்பகுதிகளை சுற்றிப்பார்த்து மக்களிடம் உள்ள குறைகளை கேட்டறிந்து அதை தீர்க்க வழி தேட வேண்டும்.
மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் குறைகள் என்ன ? அதை தீர்க்க என்ன தேவை என என்னிடம் தெரிவித்தால் அதற்கு உண்டான நிதியை நான் வாங்கி தர தயாராக உள்ளேன். காட்பாடி அடுத்த பொன்னையில் 100 படுக்கை வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனை விரைவில் அமைக்கப்படும். அதேபோல, காட்பாடி தொகுதியில் விரைவில் தொழிற்சாலையும் அமைக்கப்படும்’’ என்றார்.
இதைதொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது, ‘‘தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதால் அங்கு ஏற்கனவே வசித்தவர்களுக்கு மாற்று இடம் ஏற்படுத்தி தர மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்பெண்ணை – பாலாறு இணைப்பு திட்டம் குறித்து விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். போதிய நிதி இல்லாததால் இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அகரம் ஆற்றின் குறுக்கே கோவிந்தவாடி பகுதியில் விரைவில் தடுப்பணை அமைக்கப்படும். கோதாவரி – காவிரி ஆறு இணைப்பு, தென்பெண்ணை – செய்யாறு இணைப்பு, தாமிரபரணி – கருமேனியாறு இணைப்பு போன்ற திட்டங்கள் பரிசிலினையில் உள்ளது’’ என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் வரவேற்றார். வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் முன்னிலை வகித்தார். மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.