திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் அமைந்துள்ள அம்மன் கோவிலில் உலகப் பிரசித்திபெற்ற ‘பாடைகட்டி’ திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீசீதளா தேவி மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் ‘பாடை காவடி’ திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அதன்படி, இந்த வருடம் பங்குனித் திருவிழா கடந்த 11. 03. 2022 அன்று பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பிறகு, 13. 03 .2020 அன்று காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, 20. 03 .2022 அன்று முதல் ‘ஞாயிறு திருவிழா’ தொடங்கி, விழாவின் முக்கிய நிகழ்வான ‘பாடை காவடி’ திருவிழா இன்று நடைபெறுகிறது.
கடும் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் மக்கள் தங்களுக்கு உயிர் பிச்சை வேண்டி வலங்கைமான் மகா மாரியம்மனை வேண்டிக்கொள்வார்கள். பின்னர் அவர்களின் நோய் குணம் அடைந்தவுடன் தங்களை உயிர் பிழைக்கவைத்த அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். வேண்டுதலின்படி, மூங்கில் மூலம் ஒரு பாடையைக் கட்டி, அதில் நேர்த்திக்கடன் செய்பவரை படுக்கவைத்து, அவரது உறவினர்கள் பாடையை தூக்கிக்கொண்டு கோவிலை 3 முறை வலம்வந்து, தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றுவார்கள். நேர்த்திக்கடனை செலுத்திய பின் கோவில் பூசாரி அபிஷேக நீரை பாடையில் படுத்திருப்பவர்மீது தெளித்து எழுப்புவார்.
இந்த விழாவில், பல வெளி மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வந்திருந்து பால்குடம் மற்றும் காவடி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து 03.04.22 அன்று புஷ்ப பல்லக்கு விழாவும், அதனைத் தொடர்ந்து 10.04.2022 அன்று நடைபெறும். ‘கடை ஞாயிறு’ திருவிழாவுடன் பங்குனி பெருவிழா முடிவடைகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM