துபாயில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.2,600 கோடி முதலீட்டில் 9,700 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
துபாயில் நேற்று நடைபெற்ற ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்கள் சந்திப்பின்போது, துபாயைச் சேர்ந்த ஒயிட் ஹவுஸ் நிறுவனம் ரூ.500 கோடி முதலீட்டில் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் இரு ஒருங்கிணைந்த தையல் ஆலைகள் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
நோபுள் ஸ்டீல்ஸ் நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீட்டில் 1,200 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் டிரான்ஸ்வேல்டு குழுமம் ரூ.100 கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பும் ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர் அமைப்பு ரூ.500 கோடி முதலீட்டில் 3,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் ஷெராப் குழும நிறுவனம் ரூ.500 கோடி முதலீட்டில் 1,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்வில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஐபிபிசி துபாய் நிறுவனத்தின் தலைவர் சுரேஷ்குமார், சர்வதேச லுலு குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.யூசுப் அலி, யுஏஇ சர்வதேச முதலீட்டாளர்கள் அமைப்பின் செயலர் ஹெச்.இ. ஜமால் சாயிப் அல் ஜர்வான், தொழில் துறை செயலாளர் ச.கிருஷ்ணன், குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் துறை செயலர் வி.அருண்ராய், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்னி, துணைத் தூதர் அமன் பூரி, தமிழக அரசு உயர் அதிகாரிகள், ஐக்கிய அரபு அமீரக நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
முன்னதாக ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஐக்கிய அரபு நாடுகளுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான உறவு முன் எப்போதையும்விட இப்போது வலுவாக வளர்ந்து வருகிறது. பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதில் நம் அனைவருக்கும் ஆர்வம் இருக்கிறது. வர்த்தகம் அதிகம் நடைபெறக்கூடிய நகரமாகவும் துபாய் அமைந்திருக்கிறது. இருதரப்புக்கும் இடையே வளர்ந்து வரும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.
ஐக்கிய அரபு நாடுகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் பேசும் மக்கள் பணியாற்றியும், வணிகம் செய்தும் வருகின்றனர். தமிழர்களின் கடின உழைப்பு மற்றும் விடா முயற்சி, ஐக்கிய அரபு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருகிறது. எனவே, துபாயை வெளிநாடாக நினைக்க முடியாத அளவுக்கு தமிழர்கள் அதிகம் வாழக்கூடிய நாடாகவும் இருக்கிறது.
2030-க்குள் தமிழகத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றும் வகையில் தொலைநோக்கு பார்வையுடன் நாங்கள் செயல்படுகிறோம். அந்த இலட்சிய இலக்கை அடைவதற்காக, தமிழகத்தின் உள்கட் டமைப்புகளை மேம்படுத்துதல், பணியாளர்களின் திறனை மேம்படுத்துதல், வருங்கால தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பணியாளர்களை தயார்படுத்துதல் போன்ற பல முன்னேற்ற நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளோம்.
தமிழகத்தில் உள்கட்டமைப்பு மேம் பாடு மற்றும் ரியல் எஸ்டேட் வணிகத்துக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் இருக்கின்றன. சுற்றுலாத் துறையிலும் விருந்தோம்பல் துறையிலும் எங்கள் மாநிலத்தில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
வேளாண்மைத் துறையைப் பொருத்தவரை குளிர்பதனக் கிடங்குகள், சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றின் தேவை எங்களுக்கு உள்ளது. நிதி நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தரவு மையங்கள், வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளிலும் சிறந்த உள்கட்டமைப்புகளை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். மின்னணுவியல் துறையில் மின் வாகனங்கள், மின்னேற்றி நிலையங்கள் போன்றவற் றில் முதலீடுகள் வரவேற்கப்படுகின்றன.
இந்தியாவிலேயே முதல்முதலாக தூத்துக்குடி துறைமுகத்தில் சர்வதேச அறைகலன் பூங்காவுக்கு (பர்னிச்சர் பார்க்) அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டிய அன்றே, 375 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
கரோனா பெருந்தொற்று நேரத்திலும் கடந்த 10 மாதங்களில் மட்டும் 800 கோடி டாலர் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 120 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட் டுள்ளன. கடந்த 2020-2021-ம் நிதி ஆண்டில் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி 5.8 சதவீதமாக இருந்தது.
பல்வேறு நாடுகளின் முதலீட்டாளர் கள் மற்றும் தூதரக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக வழிகாட்டி நிறுவனத்தில் நாடுவாரியாக பிரத்யேக அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தொழில்புரிவதற்கும் முதலீடுகள் மேற்கொள்ளவும் எங்கள் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். உலகத் தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வணிகச் சூழல் அமைப்பினை தொடர்ந்து மேம்படுத்த முயற்சி செய்கிறோம். எல்லா தர வரிசைகளிலும் தமிழகம் முன்னேறி வருகிறது. எங்கள் வளர்ச்சியில் பங்கேற்று, நீங்களும் பயன்பெற வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.