தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணத்தை குடும்ப சுற்றுலாவாகவே பார்ப்பதாகவே எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
இன்று சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் பயணத்தில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதாக தகவல் வருகிறது. ஆனால், அவருடன் துறைசார்ந்த அமைச்சர்கள் அதிகாரிகள் சென்றிருந்தால் அது சரி. ஆனால், அவர் அப்படி சென்றதாக தெரியவில்லை. இதனால் முதல்வரின் துபாய் பயணம் குடும்ப சுற்றுலாவாகதான் பார்க்கப்படுகிறது. துபாய் பயணம் தொழில் முதலீட்டை ஈர்க்கவா? அல்லது சுற்றுலாவா என்றுதான் மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடங்கி முடியும் தருவாயில், தமிழ்நாட்டின் சார்பில் அரங்கம் அமைத்து துவக்கி வைப்பது வேடிக்கையாக உள்ளது. நான் வெளிநாடு சென்ற போது அப்போதைய எதிர்க்கட்சித்தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அதை விமர்சனம் செய்தார். ஆனால் உண்மையில் நான் வெளிநாடு சென்றபோது துறை சார்ந்த அமைச்சர்கள் அதிகாரிகளே உடன் வந்தனர். வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதோடு மட்டுமின்றி வளர்ச்சித் திட்டங்களை நாங்கள் கொண்டு வந்தோம். அப்போது ஸ்டாலின் திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்தார். இந்தமுறை நடந்த சர்வதேச கண்காட்சியிலும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்தான் இடம்பெற்றுள்ளன என்பதை அனைவரும் காணலாம்” என்றார்.
தொடர்ந்து அதிமுக சார்ந்தும், தமிழக அரசியல் சார்ந்தும் கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. அவற்றுக்கு பதிலளித்த அவர், “திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. சசிகலா குறித்த ஓபிஎஸ் கருத்து தனிப்பட்டது. அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பு இல்லை.
ஸ்டாலினுக்கும் எங்களுக்குமே தனிப்பட்ட முறையில் எந்த பிரச்னையும் கிடையாது, அரசியல் ரீதியாகதான் எதிர்கருத்துகளை கூறுகிறோம். எட்டுவழிச்சாலை விவாகரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. எட்டு வழிச்சாலைக்கு `எக்ஸ்பிரஸ் வே’ என்று பெயர் மாற்றம் செய்து நிறைவேற்றும் முயற்சியை திமுக மேற்கொண்டு வருகிறது” என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.
சமீபத்திய செய்தி: மயிலாடுதுறை: அமிர்தகடேஸ்வரர் கோயிலில் 25 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழாSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM