புதுடில்லி-கொரோனா பரவல் காரணமாக, நம் நாட்டில் கடந்த இரண்டு ஆண்டு களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான போக்குவரத்து சேவை, நேற்று முதல் மீண்டும் துவங்கியது.
கொரோனா பரவல் காரணமாக, நம் நாட்டில் 2020 மார்ச் முதல் சர்வதேச விமான போக்கு வரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. 2020 ஜூலை முதல், 40 நாடுகளுடன் ஒப்பந்த அடிப்படையில் சில சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, கடந்த ஆண்டு டிச., 15ல் சர்வதேச விமான போக்குவரத்தை மீண்டும் துவக்க முடிவு செய்யப்பட்டது. ‘ஒமைக்ரான்’ வகை கொரோனா பரவல் காரணமாக அது தள்ளிப்போனது.
தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதை அடுத்து, சர்வதேச விமான போக்குவரத்து சேவை நேற்று மீண்டும் துவங்கியது.இதையடுத்து, பல புதிய தளர்வுகளை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன் விபரம்:விமான பணியாளர்கள், ‘பி.பி.இ., கிட்’ எனப்படும், பாதுகாப்பு கவச உடையை விமான பயணத்தின் போது இனி அணிய தேவைஇல்லை.
விமான நிலைய பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்கள், பயணியரை இனி தொட்டுப் பார்த்து சோதிக்கலாம்.சர்வதேச விமான பயணங்களின் போது அவசர மருத்துவ தேவைகளுக்காக, மூன்று இருக்கைகளை காலியாக வைத்திருக்க வேண்டும். முக கவசம் அணிவது, கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்து கொள்ளும் நடைமுறைகள் விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் தொடரும்.விமானங்களில் பி.பி.இ., கிட், கிருமி நாசினி, என் 95 முக கவசம் ஆகியவை கூடுதலாக வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement