புதுடெல்லி: ‘நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறுவதில் உலகை ஒன்றிணைக்கிறது யோகா’ என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். கத்தார் தலைநகர் தோகாவில், அங்குள்ள இந்திய தூதரகம் சார்பில் 114 நாடுகளைச் சேர்ந்த மக்களுடன் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டு, புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘தோகாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மகத்தான முயற்சியை பாராட்டுகிறேன். நல்ல உடல் ஆரோக்கத்தை பேணிக் காப்பதில் யோகா உலகையே ஒன்றிணைக்கிறது,’ என கூறி உள்ளார்.இதே போல், குஜராத்தின் ஜாம்நகரில், பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையத்தை அமைக்க ஆயுஷ் அமைச்சகமும், உலக சுகாதார நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளதையும் மோடி வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டரில், ‘உலக சுகாதா அமைப்பின் பாரம்பரிய மையமாக இந்தியா கவுரவிக்கப்பட்டு உள்ளது. இந்த மையம் ஆரோக்கியமான உலகை உருவாக்குவதற்கும், உலகளாவிய நன்மைக்காக நமது வளமான பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும். இந்தியாவின் பாரம்பரிய மருந்துகள் மற்றும் ஆரோக்கிய நடைமுறைகள் உலகளவில் மிகவும் பிரபலமாக உள்ளன,’ எனக் கூறி உள்ளார். தேர்வு எழுதும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் ‘பரிக்ஷா பே சர்ச்சா’ எனும் நிகழ்ச்சி மூலம் வரும் ஏப்ரல் 1ம் தேதி பிரதமர் மோடி உரையாட உள்ளார். இந்நிகழ்ச்சி குறித்து நேற்று அவர் தனது டிவிட்டரில், ‘மனச்சுமையை போக்கக் கூடிய பரிக்ஷா பே சர்ச்சா உரையாடல், தேர்வு, படிப்பு, வாழ்க்கை மற்றும் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேச வாய்ப்பளிக்கிறது. மன அழுத்தமில்லாத தேர்வுகளைப் பற்றி நாம் மீண்டும் பேசுவோம். இந்த ஆண்டுக்கான பரிக்ஷா பேர் சர்ச்சா நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கிறேன்’ என கூறி உள்ளார்.* மோடி பற்றி அறிய புதிய இணையதளம்பிரதமர் மோடியின் வாழ்க்கைப் பயணத்தில் அவரை சந்தித்தவர்கள், உரையாடியவர்களிடம் இருந்து உத்வேகம் தரும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதை ஒன்றிணைக்க ‘modistory.in’ என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் மோடியின் பள்ளி பருவத்தில் இருந்து பிரதமர் ஆனது வரையிலும் அவரது ஒவ்வொரு காலகட்டத்தை பற்றியும் அவருடன் இணைந்து பயணித்தவர்கள் பகிர்ந்து கொள்ளும் வீடியோக்கள் இடம் பெற்றுள்ளன. * 30ம் தேதி பிம்ஸ்டெக் மாநாடுவங்கக் கடலோர நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான பிம்ஸ்டெக் மாநாடு வரும் 30ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். இந்த அமைப்பில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த அமைப்பின் இந்த 5வது மாநாட்டை இலங்கை நடத்துகிறது.