புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பெண் எம்பி.க்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும், பெண்களிடையே தேர்தலில் வாக்கு செலுத்துவதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கூறி உள்ளார். நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமாக பணியாற்றிய எம்பி.க்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது. இதில் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா பங்கேற்று பேசியதாவது: நாடாளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் குறைந்த அளவில் தான் உள்ளது. ஆனால் வாக்கு பதிவு செலுத்துவதற்கான ஆர்வம் பெண்களிடையே அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டபேரவை தேர்தலில் கோவா, உத்தரகாண்ட்,மணிப்பூர், உபி மாநிலங்களில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர். பஞ்சாப்பில் வாக்களித்த ஆண், பெண் வாக்காளர்களின் சதவீதம் ஒரே அளவில் உள்ளது. முதலாவது நாடாளுமன்ற அவையில் மொத்தம் 15 பெண் உறுப்பினர்கள் இருந்தனர். தற்போது, பெண்கள் எண்ணிக்கை 78 ஆகி உள்ளது. இதில் மெதுவான முன்னேற்றம் காணப்பட்டாலும், நாடாளுமன்றம் என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான பெண்கள் தலைமை பதவிக்கு வந்துள்ளனர். இதன் மூலம் சமுதாயத்தில் முன்னேற்றம் காணப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.