நாடாளுமன்ற கூட்டத்தொடராக இருந்தாலும், சட்டமன்ற கூட்டத்தொடராக இருந்தாலும் விவாதங்களின்போது கூச்சல் போடுதல், வெளிநடப்பு செய்தல் போன்றவை எப்போதும் நிகழக்கூடிய ஒன்றாகத் தான் உள்ளது. இந்த நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரான சுஷில் சந்திரா, “சூடான வாதங்கள், விவாதங்கள் மற்றும் பேச்சுக்கள்தான் ஒரு வலுவான நாடாளுமன்றத்தின் அளவுகோலாகும். ஆனால் அடிக்கடி நிகழும் இடையூறுகள், வெளிநடப்புகள், உண்ணாவிரதங்கள் ஆகியவை நம்மைப் போன்ற வலுவான நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு நல்லதல்ல” என ப்ரைம் பாயின்ட் அறக்கட்டளை நடத்திய சன்சத் ரத்னா விருது வழங்கும் விழாவில் நேற்று கூறியிருக்கிறார்.
இது தொடர்பாகப் பேசிய அவர், “சூடான வாதங்கள், விவாதங்கள் மற்றும் பேச்சுக்கள்தான் ஒரு வலுவான நாடாளுமன்றத்தின் அளவுகோலாகும். அதே நேரத்தில் அடிக்கடி நிகழும் இடையூறுகள், வெளிநடப்புகள், உண்ணாவிரதங்கள் ஆகியவை நம்மைப் போன்ற வலுவான நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. இதுபோன்ற இடையூறுகளால் இழக்கப்படும் நேரம் வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் பங்கேற்பது, கேள்வி நேரம் மற்றும் ஜீரோ ஹவர் ஆகியவற்றின் மூலம் முக்கியமான விஷயங்களை எழுப்புவதுதென்பது நிறுவப்பட்ட நாடாளுமன்ற நடைமுறைகள். இதன் மூலம் மக்கள் தங்கள் குரலைக் கேட்கவும், அரசாங்கத்தைப் பொறுப்புக் கூறவும் முடியும். இந்த பொன்னான வாய்ப்பு, நாடகமாடுதல், கோஷங்கள் எழுப்புதல் அல்லது வெளிநடப்பு செய்வது போன்றவற்றால் வீணடிக்கப்படக்கூடாது. இதுபோன்ற கமிட்டிக் கூட்டங்களில் குறைந்து வரும் வருகை கவலைக்குரியது. எவ்வாறாயினும், எம்.பி-க்கள் இந்த விவாதங்களில் உற்சாகமாகவும், பாரபட்சமின்றியும் பங்கேற்க வேண்டும்.
மேலும், அரசியலமைப்புச் சட்டம், பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டிற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பல அடிமட்ட பெண் தலைவர்கள் தங்கள் தலைமைப் பண்புகளை வெளிப்படுத்தி, அவர்களின் சமூகங்களில் காணக்கூடிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளனர்” என்று கூறினார்.