பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “புகைப்படத்தில் எனக்கு பின்னணியில் காட்சியளிக்கும் பனைமரம் கிளைகளுடன் இருக்கும். பனை மரத்திற்கு கிளைகள் இருக்காது என்று கூறுவார்கள். அரிதாக சில இடங்களில் பனை மரங்கள் கிளைகளுடன் காட்சியளிக்கும். ஆனாலும், அது அதிசயம் தான்.
அதேபோல், கிளைகளுடன் இருக்கும் இந்த பனைமரமும் அதிசயம் தான். இந்த பனைமரம் திண்டிவனம் கோனேரிக்குப்பம் கல்விகோயில் வளாகத்தில் உள்ளது.
தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் 2002-ஆம் ஆண்டில் நடைபெற்ற புவி உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்காவுக்கு சென்றிருந்த, பசுமைத்தாயகம் அமைப்பின் அப்போதைய தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், அங்கிருந்து திரும்பும் போது சில பனை விதைகளை கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார்.
அந்த பனை விதைகளை கல்விக் கோயில் வளாகத்தில் அப்போது நட்டு வைத்தேன். அதன்பின் 20 ஆண்டுகளாகி விட்ட நிலையில், அந்த விதைகள் முளைத்து மரமாகி கிளை விட்டு வளர்ந்து இப்படி காட்சியளிக்கின்றன. கல்விக் கோயில் வளாகத்திற்கு அழகு சேர்க்கும் அம்சங்களில் இந்த மரங்கள் குறிப்பிடத்தக்கவை”
இவ்வாறு அந்த பதிவில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.