புதுடில்லி-ளிநாடுகளுக்கு பயணிக்கும் இந்தியர்களுக்கு, கொரோனா தடுப்பூசியின், ‘முன்னெச்சரிக்கை டோஸ்’ எனப்படும், ‘பூஸ்டர் டோஸ்’ செலுத்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச விமான சேவை இன்று துவங்கவுள்ளதை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நம் நாட்டில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கிடையே, 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு, ‘கோவாக்சின், கோவிஷீல்டு’ உள்ளிட்ட தடுப்பூசிகள், இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகின்றன.
சமீபத்தில், 12 – 14 வயதுடைய சிறார்களுக்கு, ‘கோர்பேவாக்ஸ்’ தடுப்பூசி செலுத்தும் பணியும் துவங்கியது.இந்நிலையில், இரண்டு தடுப்பூசி செலுத்தியோருக்கு, ஒன்பது மாத இடைவெளிக்குப் பின், பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி நடந்து வருகிறது.சுகாதார ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த டோஸ் செலுத்தப்படுகிறது. இதுவரை, 2.24 கோடி பூஸ்டர் டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், வெளிநாடுகளுக்கு பயணிக்கும் இந்தியர்களுக்கு, பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எதிர்பார்ப்புஇது குறித்து, மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:இரண்டு ஆண்டுகளுக்குப் பின், சர்வதேச விமான சேவைகள் இன்று துவங்க இருப்பதால், படிப்பு, வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக, அதிக அளவில் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லத் துவங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.ஒரு கோடி சிறார்களுக்கு தடுப்பூசிகடந்த 16ம் தேதி முதல், 12 – 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த வயது சிறார்கள் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், “ஒரு கோடிக்கும் அதிகமான, 12 – 14 வயதுடைய சிறார்களுக்கு, கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுவிட்டது. இந்த சாதனையை தொடருவோம்,” என்றார்.