இஸ்லாமாபாத் :எதிர்க்கட்சிகளுடன், கூட்டணிக் கட்சியினர் மற்றும் சொந்தக் கட்சியினரும் போர்க் கொடி துாக்கியுள்ளதால், இன்று நடக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடித்து, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான், பதவியை தக்க வைப்பாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், பி.டி.ஐ., எனப்படும் பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் பிரதமராக உள்ளார்.
கடந்த 2018ல் நடந்த தேர்தலில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவால், அவர் பிரதமரானார்.
பொதுக் கூட்டம்
இந்நிலையில், கடும் நிதி நெருக்கடியில் பாகிஸ்தான் தள்ளாடுகிறது. இந்த நிதி நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு பிரதமர் இம்ரான் கானின் செயல்பாடுகளே காரணம் என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இதையடுத்து இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை பார்லிமென்டில் தாக்கல் செய்தன.
கடந்த வாரத்தில் இதன் மீது ஓட்டெடுப்பு நடக்கவிருந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, பார்லிமென்டில் இன்று விவாதமும், ஓட்டெடுப்பும் நடக்க உள்ளது.
இதற்கிடையே, ஆதரவு அளிக்கும் சில கூட்டணி கட்சிகளும், சொந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்கள் சிலரும், இம்ரான் கானுக்கு எதிராக போர்க் கொடி துாக்கியுள்ளனர். இதனால் அவரது பதவி ஊசலாடுகிறது.
இந்நிலையில், தன் கட்சியின் பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தை இம்ரான் கான் நேற்று நடத்தினார்.தலைநகர் இஸ்லாமாபாதில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் வரவழைக்கப்பட்டனர். இதற்காக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. பல லட்சம் பேர் இதில் பங்கேற்றதாக இம்ரான் கட்சியினர் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தில் இம்ரான் கான் பேசியதாவது:தன் ஆட்சி யின்போது, ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கும் வகையிலான, சமரசம் செய்யும் மசோதாவை, முன்னாள் பிரதமர் முஷாரப் அறிமுகம் செய்தார். ஆனால், நீதிமன்ற
தலையிட்டதால், அதுநிராகரிக்கப்பட்டது.
அரசியல்
நான் பிரதமரானதில் இருந்து, எதிர்க்கட்சிகளில் இருக்கும் ஊழல் தலைவர்கள், அதுபோன்ற மசோதாவை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், இந்த கிரிமினல்களுக்கு மன்னிப்பு அளிக்க மறுத்து விட்டேன். அதனால், எனக்கு எதிராக அரசியல் செய்து வருகின்றனர்.என் ஆட்சி பறிபோனாலும், உயிர் பறிபோனாலும், இதுபோன்ற கிரிமினல்களை தப்பிக்க விட மாட்டேன். என் ஆட்சியை கவிழ்ப்பதற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement