சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து, அடிப்படையில்லாத, ஆதாரமற்ற புகார்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பொதுவெளியில் பேசி வருவது அருவருப்பு தரும் அநாகரிக அரசியலாகும். இதுபோன்ற மலிவான செயலில் ஈடுபடுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் உயர் அதிகாரிகளுடன் அரசு முறைப் பயணமாக துபாய் சென்றுள்ளார்.
துபாயில் நடைபெறும் எக்ஸ்போ 2022 கண்காட்சியில் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பல்துறை அரங்குகளை திறந்து வைக்கவும், ஐக்கிய அமீரக அரபு நாடுகளில் உள்ள பெரும் முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து, தமிழகத்திற்கு வந்து, தொழில்களில் முதலீடு செய்ய அழைக்கவும் முதல்வர் நான்கு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதல்வரின் பயணம் எந்தவித ஒளிவு மறைவும் இல்லாத வெளிப்படையானது. தமிழக அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து விட்டு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “ரூ.5000 கோடி மர்மப் பயணம்” “முதல்வர் துபாய் பயண மர்மம்” என்றெல்லாம் அடிப்படையில்லாத, ஆதாரமற்ற புகார்களை பொதுவெளியில் பேசி வருவது அருவருப்பு தரும் அநாகரிக அரசியலாகும். இதுபோன்ற மலிவான செயலில் ஈடுபடுவதை பாஜக தலைவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
முதல்வரின் அரசு முறைப் பயணத்தை கொச்சைப்படுத்தும் அண்ணாமலையின் இழி செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டிக்கிறது” என்று கூறியுள்ளார்.