மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி மாணவி ஒருவர் சக மாணவர்களால் 2017ம் ஆண்டிலிருந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். அதுகுறித்து பேராசிரியர் ஒருவரிடம் புகார் தெரிவித்ததால் சாதி ரீதியாக அவமதித்து பேராசிரியரே தொடர் தொந்தரவுகள் கொடுத்துள்ளார்.
உள்புகார் கமிட்டியில் புகாரளித்து குற்றச்சாட்டுக்கள் உண்மை என உறுதிப்பட்ட பிறகும் குற்றவாளிகள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் மனமுடைந்த சம்பந்தபட்ட மாணவி மூன்று முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை காவல்துறை ஆணையர், எஸ்சி-எஸ்டி ஆணையத் தலைவர் என புகார் அனுப்பப்பட்ட பிறகும், எந்த அரசு அமைப்பும் இந்த புகாரை கண்டு கொள்ள மறுத்திருக்கின்றனர். தேசிய மகளிர் ஆணையம் புகார் பதிவு செய்ய சென்னை மாநகர காவல் ஆணையருக்கு அறிவுறுத்திய பிறகு மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 8 பேர் மீது 2021 ஜூன் மாதத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
10 மாதங்கள் முடிந்துவிட்ட நிலையிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட புகார் தெரிவிக்கப்பட்ட பிறகும், முதல் தகவல் அறிக்கையில் 376வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யவில்லை. பாதிக்கப்பட்ட மாணவி பட்டியலினத்தை சார்ந்தவராக இருந்தும் குற்றமிழைத்தவர்கள் பட்டியலினத்தை சாராதவர்கள் என்ற வகையிலும், எஸ்.சி-எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இதுவரையிலும் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யவில்லை.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கடந்த 5 வருடங்களாக சொல்லொணா வேதனைக்கு உள்ளாக்கப்பட்ட இந்த மாணவியின் குரல், ஐஐடி நிர்வாகம், காவல்துறை, எஸ்.சி-எஸ்.டி ஆணையம் உள்ளிட்ட அதிகார புலனாய்வு அமைப்புகளின் காதுகளுக்கும், கண்களுக்கும் எட்டாவண்ணம் கரடுதட்டிப் போன அமைப்பாக இருப்பது மிகப்பெரும் அநீதி.
எனவே, இந்த வழக்கில் உரிய பிரிவுகளை சேர்த்து விசாரணையை விரைவுப்படுத்தி உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டுமெனவும், குற்றவாளிகள் அனைவரையும் தாமதமின்றி கைது செய்ய வேண்டுமெனவும், உள் புகார் கமிட்டி குற்றம் நடந்ததாக உறுதி செய்யப்பட்டட நிலையில் குற்றவாளிகள் அனைவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசையும், ஐஐடி நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறது.
இந்த பிரச்சனையில் கொஞ்சமும் நியாயமற்ற முறையில் 10 மாத காலமாக இழுத்தடித்து கொண்டிருக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இதுபோன்ற புகார்களை டிஜிபி அலுவலகம் மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்னுரிமை அடிப்படையில் அணுகுவதற்கு உரிய ஏற்பாடுகள் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டுமெனவும் தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது”
இவ்வாறு அந்த அறிக்கையில் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.