பாலியல் வன்கொடுமை:
விருதுநகர் பாண்டியன் நகர்ப் பகுதியில் தன் தாயுடன் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பெண்ணுக்கு அந்த பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை காட்டி ஹரிஹரன் பலமுறை தனிமையிலிருந்துள்ளார். இவர்கள் இருவரும் தனிமையிலிருந்ததை அந்த பெண்ணுக்குத் தெரியாமல் வீடியோப் பதிவு செய்திருக்கிறார் ஹரிஹரன்.
ஹரிஹரனிடம் அந்த பெண் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியபோது தொடர்ந்து மறுத்துவந்துள்ளார். இதனால், அந்த பெண்ணின் வீட்டார் வேறு இடத்தில் அவருக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியிருக்கின்றனர். அந்த சமயத்தில், ஹரிஹரன் அந்தப் பெண்ணிடம் இருவரும் தனிமையிலிருந்த வீடியோவைக் காட்டி மிரட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அதோடு, அந்த வீடியோவைத் தன் நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளார். அவரின் நண்பர்களான மாடசாமி, ஜுனைத் அகமது, பிரவீன் மற்றும் நான்கு பள்ளி மாணவர்கள் என மொத்தம் 8 பேர் அந்த வீடியோவைக் காட்டி அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
கைது மற்றும் கட்சியிலிருந்து நீக்கம்:
இந்த விவகாரம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் கடந்த மார்ச் 20-ம் தேதி விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். புகாரின் அடிப்படையில் ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜுனைத் அகமது கைது செய்யப்பட்டனர். மேலும் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஜூனைத் அகமது விருதுநகர் 10-வது வார்டு தி.மு.க இளைஞரணி அமைப்பாளராகவும், ஹரிஹரன் 24-வது வார்டு இளைஞரணி உறுப்பினராகவும் இருக்கிறார்கள். இந்த நிலையில், ஜூனைத் அகமது கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக தி.மு.க தலைமை அறிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில், இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் கிடைக்கும் நீதி மற்ற வழக்குகளில் இந்தியாவுக்கு முன்மாதிரி வழக்காக இருக்கும். கண்டிப்பாகப் பொள்ளாச்சி பாலியல் வழக்குபோல இல்லாமல், வண்ணாரப்பேட்டை 13 வயது சிறுமி பாலியல் வன்முறை வழக்குபோல் இல்லாமல், இந்த வழக்கு நிச்சயம் முறையாக நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து, அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேலிடம் பேசினோம். “இந்த விருதுநகர் பாலியல் வன்கொடுமை குற்றத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள். குற்றம் செய்தவர்களே வழக்கு விசாரணையைச் செய்தால் எப்படி இருக்கும். பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்றம் கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்தது என்பதினால் அன்றைய தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் பெரும் போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடத்தின. அன்று போராட்டம் நடத்தியவர்கள் இன்று எங்கே போனார்கள். பெரும் குரல் கொடுத்த பலரும் இப்போது வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த தவறுக்கு தி.மு.க ஆட்சிதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.” என்றார்.
மேலும், “பொள்ளாச்சி விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணை வேண்டாம். வழக்கைச் சரியாக விசாரிக்க மாட்டார்கள். சரியான நியாயம் கிடைக்காது என்றும், பொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ தான் விசாரணை நடந்த வேண்டும் என்று கேட்ட தி.மு.க, தற்போது விருதுநகர் சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்குத் தான் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கின் நிலைமை மிக மோசமாகச் சென்றுகொண்டிருக்கிறது. தமிழக காவல் ஆணைய தலைவர், முன்னாள் உயர் நீதிமன்றம் நீதிபதி சி.டி.செல்வத்தின் காவலுக்கு இருந்த காவலரை மூன்று பேர் சரமாரியாக வெட்டிய சம்பவம் நடந்தது. தமிழகம் முழுவதும் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை பயங்கரமாக நடந்துகொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாக மாறியுள்ளது. போதைப் பொருள் பழக்கம் பெருமளவுக்கு அதிகரித்துள்ளது. எதையுமே கட்டுப்படுத்த முடியாமல் தி.மு.க அரசு தோல்வியடைந்துள்ளது. சின்ன பிரச்னையைக் கூட பெரிதாக்கி அரசியல் செய்த தி.மு.க, இப்போது பூதாகரமான பிரச்னையையும் கடுகை போலச் சொல்லி மறைத்து கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை” என்றார்.
இந்த பிரச்னை குறித்து தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம், “பொள்ளாச்சி பாலியல் வன்முறைச் சம்பவத்தில் அந்த பெண் அழுது கதறியது இன்றும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. பொதுமக்களே அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் காவல்நிலையம் அழைத்துச் சென்றார்கள். அந்த வழக்கில் கைது செய்தவர்களைத் தப்பிக்க வைக்க எவ்வளவு வேலை செய்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதுமட்டுமல்லாது அந்த வழக்கில் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் அவரின் மகனுக்கும் தொடர்பிருந்ததாகக் கூறப்பட்டது. அதற்கு அ.தி.மு.க சார்பில் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?
பொள்ளாச்சி, அரியலூர், கன்னியாகுமரி என்று பல இடங்களில் நடைபெற்ற பாலியல் வன்முறைகளில் அ.தி.மு.க தலைவர்களின் பெயர்கள் அடிபட்டது. யார் மீதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? இந்த வழக்கு குறித்துப் பேச அ.தி.மு.க-வினருக்கு என்ன அருகதை உள்ளது. இந்த விருதுநகர் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கட்சி ரீதியான நடவடிக்கையும் உடனடியாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் என்ன நடக்கிறது என்பதைப் பொதுமக்கள் அனைவருமே தெரிந்துகொள்ளும் வகையில் விசாரணை நடைபெறுகிறது. முதல்வர் உறுதியாக இருக்கிறார். அவர் இந்த வழக்கில் நடவடிக்கை எடுப்பது குறித்து பொதுக்கூட்டத்தில் அல்ல சட்டமன்றத்தில் பேசியுள்ளார். குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும். யாராக இருந்தாலும் இனி இப்படி ஒரு தவறைச் செய்ய அஞ்சுவார்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது” என்று கூறினார்.