சென்னை: பி.கே. மூக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவினை அரசு விழாவாக கொண்டாடவும், அவர் பிறந்த ஊரான பாப்பாப்பட்டியில் உள்ள பள்ளிக்கு அவரது பெயரை சூட்டவும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்” என சொல்லில் மட்டுமின்றி செயலிலும் செய்து காட்டிய பெருமைக்குரிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் வாரிசு பி.கே. மூக்கையா தேவர்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு நடத்தப்பட்ட முதல் பொதுத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியிலிருந்தும், 1957, 1962, 1967, 1971 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் உசிலம்பட்டி தொகுதியிலிருந்தும் தொடர்ச்சியாக ஆறு முறை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு திறம்பட மக்கள் பணியாற்றியவர்.
தற்காலிக பேரவைத் தலைவராக பணியாற்றிய அனுபவம் பெற்றவரும், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்புற பணியாற்றியவருமான மறைந்த பி.கே. மூக்கையா தேவரின் நூற்றாண்டு துவக்க விழா 04-04-2022 அன்று துவங்க இருக்கிறது.
அவர் மாணவப் பருவத்திலிருந்தே பொதுக் காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டு, நீதிக்கும், நேர்மைக்கும், நியாயத்திற்கும் போராடியவர். அகில இந்திய அளவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலும், தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தலைமையிலுமான அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு, தேசியத்தையும், தெய்வீகத்தையும் உயர்த்திப் பிடித்த மூக்கையா தேவர் ,
1963 ஆம் ஆண்டு அந்தக் கட்சியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து 1971 ஆம் ஆண்டு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவராக உயர்ந்து, தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர்.
இப்படி பல பெருமைகளுக்குரியவரும், பிற்படுத்தப்பட்ட மக்களை தூக்கிவிட பாடுபட்டவரும், உறங்காப் புலி என பெருமையோடு அழைக்கப்பட்டவரும், வீரம் மிகுந்த மண்ணின் மைந்தருமான மறைந்த பி.கே. மூக்கையா தேவரின் நூற்றாண்டு துவக்க விழா 04-04-2022 அன்று ஆரம்பிக்க இருப்பதால்,
அதனை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென்பதும், அவர் பிறந்த ஊரான பாப்பாபட்டியில் உள்ள அரசு கள்ளர் பள்ளிக்கு பி.கே. மூக்கையா தேவர் பெயரை சூட்ட வேண்டுமென்பதும் தென் தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாக உள்ளது.
எனவே, தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, தென் தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து, பி.கே. மூக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவினை அரசு விழாவாக கொண்டாடவும், அவர் பிறந்த ஊரான பாப்பாப்பட்டியில் உள்ள பள்ளிக்கு அவரது பெயரை சூட்டவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.