புதுச்சேரி: புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை கணக்கு பார்க்காமல் தமிழகம் தர வேண்டும் என ஆளுநர் தமிழிசை கோரியுள்ளார். அதேநேரத்தில் மத்திய அரசு நிதி தருமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.
புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத், பெங்களூருக்கு இன்று மதியம் முதல் மீண்டும் விமான சேவை தொடங்கியது. முதல் விமானத்தில் வந்த துணை நிலை ஆளுநர் தமிழிசையை முதல்வர் ரங்கசாமி வரவேற்றார். மத்திய உதான் திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களை வான் வழியாக இணைக்க விமான சேவை சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் புதுச்சேரியிலிருந்து ஐதராபாத்திற்கு விமான சேவையை தொடங்கியது. இதற்கு பயணிகளிடம் வரவேற்பு கிடைத்தை தொடர்ந்து, மீண்டும் பெங்களூரூக்கு விமான சேவை தொடங்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முடிவு செய்தது .அதன்படி மீண்டும் சேவையை தொடங்கியது.
கரோனா காலத்தில் விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது.இந்நிலையில் இன்று முதல் ஹைதராபாத், பெங்களூர் நகரங்களுக்கு விமான தொடங்கப்பட்டது. ஹைதராபாத்திலிருந்து இன்று பிற்பகல் 12.05 மணிக்கு புறப்பட்டு விமானம் பகல் 1.30 மணிக்கு வந்தடைந்தது. முதல் விமானத்தில் பயணிகளுடன் துணைநிலை ஆளுநர் தமிழிசை பயணம்செய்து புதுச்சேரி வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் துணைநிலை ஆளுநரை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் உள்ளிட்ட அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து பயணிகளுக்கு பூங்கொத்தும் இனிப்பும் கொடுத்து விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர். ஹைதராபாத் ஐஐடி தயாரித்த, 5 குறைந்தவிலை வென்டிலேட்டர்களை புதுச்சேரி அரசிற்கு ஆளுநர் தமிழிசை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை கூறியது: “புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கப்பணிகள் தொடர்பாக மத்திய விமானத்துறை அமைச்சரிடம் பேசினேன். விமான நிலைய விரிவாக்கத்துக்கு தமிழகத்தின் நிலம் தேவைப்படுகிறது. இப்பணியில் தமிழகமும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்நிலத்தை கணக்கு பார்க்காமல் தந்தால் தமிழகம் சார்ந்தோருக்கும் விமான நிலைய விரிவாக்கத்தால் பலன் உண்டு. பரந்து விரிந்த மனதோடு தமிழகம் ஒத்துழைக்கவேண்டும்” என்று குறிப்பிட்டார். விமான நிலைய விரிவாக்கத்துக்கு மத்திய அரசு நிதி தருமா என்ற கேள்விக்கு ஆளுநர் பதிலளிப்பதை தவிர்த்து அங்கிருந்து புறப்ப்டடார்.
“வாட்டர் சல்யூட்” : முன்னதாக, ஹைதராபாத்திலிருந்து இன்று பிற்பகல் 12.05 மணிக்கு புறப்பட்டு விமானம் பகல் 1.30 மணிக்கு புதுச்சேரி விமான நிலையம் வந்தடைந்த விமானத்துக்கு, விமான நிலையத்தின் சார்பில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து வாட்டர் சல்யூட் மரியாதை செய்யப்பட்டது.