மண உறவுக்குள் வல்லுறவு: மதங்களுக்கு எதிராக ஒரு தீர்ப்பு!

மனைவியுடன் ‘கட்டாய உடல் உறவு’ கொள்வதும் பாலியல் வன்கொடுமைதான் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375 பாலியல் வன்கொடுமையை அறிவிக்கிறது. அதன்படி ஒரு ஆண், பெண்ணின் விருப்பம் இல்லாமலும், அவளை மிரட்டியோ அல்லது அவளுக்கு வேண்டிய ஒருவரை எதாவது செய்து விடுவேன் என அச்சுறுத்தியோ, அவளுக்கு மயக்கம் வரவைத்தோ பாலியல் வன்கொடுமை செய்தால் அது குற்றமாகும்.

அதே நேரம், மனைவியை அவளது விருப்பத்துக்கு மாறாக உறவு கொண்டால் – வன்புணர்வு செய்தால் குற்றமாகாது என்பது சட்டம். (அந்த ‘மனைவி’க்கு 15 வயதுக்குள் இருக்கக் கூடாது; அப்படி இருந்தால் அது வன்கொடுமை என்பதே நிபந்தனை!)

கர்நாடக மாநிலத்தில் ஒரு பெண், “என் கணவர் என்னைப் பாலியல் அடிமையாக நடத்துகிறார்; கட்டாய உடல் உறவு கொள்கிறார். இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபட நிர்ப்பந்திருக்கிறார்; அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்று கீழமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் கணவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதை எதிர்த்து கணவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பையே உயர் நீதிமன்றம் உறுதிசெய்தது.

திருமணம்

ஆனால் இந்துத் திருமணச் சட்டம் அப்படிச் சொல்லவில்லை.‘மனைவி தனது கணவனின் பாலியல் விருப்பத்தை மறுப்பது கூடாது. அப்படி நடந்தால் கணவன் விவாகரத்து செய்யலாம்’ என்கிறது. இந்த எண்ணம் – சட்டம், மதங்களின் மூலமாகவே வந்தது. இந்து மதத்தை எடுத்துக்கொள்வோம். இதில் பெண்ணடிமைத்தனத்துக்கான உதாரணங்கள் ஏராளம்.

அதில் ஒன்று..

இளைஞன், எத்தகைய பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு வடமொழியில் ஒரு ஸ்லோகம் உண்டு.

கார்யேஷு தாசி
கரணேஷு மந்திரி
ரூபேஷு லட்சுமி
க்ஷமவா தரித்ரி
போத்யேஷு வேஸ்ய
சமதர்ம யுக்தா
குல தர்ம பத்தினி

சேவை செய்வதில் தாசியைப் போலவும், யோசனை சொல்லுவதில் மந்திரியைப் போலவும், அழகில் லட்சுமியைப் போலவும், மன்னிப்பதில் பூமாதேவியைப் போலவும், அன்போடு ஊட்டுவதில் அன்னையைப் போலவும், மஞ்சத்தில் கணிகையைப் போலவும், நடந்து கொள்ளக்கூடிய ஒருத்தியே குலதர்ம பத்தினி என்கிறது அந்த ஸ்லோகம்.

அதே நேரம், கணவனுக்கான ‘லட்சணங்கள்’ அதாவது மனைவியிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்த ஸ்லோகங்கள் இல்லை!

கிறிஸ்துவ மதமும் இதில் விதிவிலக்கல்ல

ஆண் – பெண் பாகுபாடு, ஆதாம் – ஏவாள் ‘காலத்திலேயே’ துவங்கிவிட்டது. “ஆதாம் முதலில் படைக்கப்பட்டான், ஏவாள் ஆதாமிற்குத் துணையாக அவனுக்கு உதவிசெய்யும்படி உண்டாக்கப்பட்டாள்” என்கிறது பைபிள் (ஆதியாகமம் 2:18-20).

“கடவுளின் கட்டளையை மீறி கனியை உண்ட ஆதாம், குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு சிரமப்பட வேண்டும்” என்கிற மெல்லிய தண்டனை. ஏவாளுக்கோ, “ஆதாமின் வித்தைப் பெற்று அதனால் கரு உண்டாகி மிகவும் சிரமப்பட்டு குழந்தைகளைப் பெற்றெடுப்பாய்” என்ற கடுமையான தண்டனை.

“மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்” (எபேசியர் 5:22-24).

இஸ்லாம் மதமும் இதற்கு விதிவிலக்கல்ல.

இது குறித்து சாதிக் சமத், “பர்தா போடுவது, வாரிசுக்காக வயதில் மூத்த ஆண்கள், சிறுவயதுப் பெண்களைத் மணமுடிப்பது, பெண்களைப் பள்ளிவாசலில் அனுமதிக்க மறுப்பது, அஜ்ரத் பணியில் பெண்களை சேர்க்காமல் இருப்பது, மனைவியைப் பார்க்காமலேயே “தலாக்” என்ற வார்த்தையப் பயன்படுத்தி விவாகரத்து செய்து அதன் மூலம் பல மணம் புரிவது, பெண்களைப் பிள்ளை பெறும் இயந்திரங்களாகவே பாவிப்பது போன்ற கொடுமைகள் இன்றும் நடந்துவருகிறது. – இவற்றில் தலாக் மட்டும் சட்டத்தினால் விதிவிலக்கு” என்கிறார்.

திருமணம்

அதுமட்டுமல்ல. “ஒருவர் தம் மனைவியைப் படுக்கைக்கு அழைக்கும்போது அவள் வர மறுத்திட்டால், அவளைப் பொழுது விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 5193) .

இப்படி மதங்கள் மனைவியானவளை அடிமையாகவே பாவிக்கக் கற்றுக்கொடுத்திருக்கின்றன. தற்போது கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்திருப்பது, பெண்ணடிமைத்தனத்துக்கு மட்டுமல்ல – அதற்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும் மதங்களுக்கும் எதிரான தீர்ப்பே!

நாகரிகம் வளர வளர, மதங்களின் பிற்போக்கு கட்டுப்பாடுகள் அழியும் என்பதற்கு இந்த வழக்கின் தீர்ப்பு ஒரு சாட்சி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.