புதுடெல்லி:
மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும், பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு (CUET) மூலமாக மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சமீபத்தில் அறிவித்தது. தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்தும் என தெரிவிக்கப்பட்டது. எனவே, இனி இந்த தேர்வு மூலமாகவே, நாட்டில் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்பின் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்நிலையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களும், பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு நடத்தி, அந்த மதிப்பெண்களைக் கொண்டு வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தி உள்ளது.
மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த மாநில உயர்கல்வி நிலையங்கள் முன்வர வேண்டும் என்றும், மாணவர்களுக்கு சம வாய்ப்பு ஏற்படுத்த இந்த பொது நுழைவுத் தேர்வு முறை உதவும் என்றும் யுஜிசி கூறி உள்ளது.
பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வை ஏற்றுக்கொள்வது தொடர்பாக, அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் துணைவேந்தர்கள், இயக்குநர்கள் மற்றும் முதல்வர்களுக்கு யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் கடிதம் எழுதி உள்ளார்.
அதில் இணையதளத்தில் CUET தேர்வுக்கான விண்ணப்ப பக்கம் ஏப்ரல் 2ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை திறந்திருக்கும் என்றும், இப்போதைக்கு, அடுத்த கல்வியாண்டு முதல் 45 மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் CUET கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் கூறி உள்ளார். மேலும், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் CUET தேர்வை ஏற்றுக்கொண்டால், மாணவர்கள் பல நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டியதில்லை. இது பல்வேறு கல்வி வாரியங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சமமான வாய்ப்பை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, CUET தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை, இன்று தனது வலைத்தளத்தில் nta.ac.in ஜூலை முதல் வாரத்தில் நடத்தப்படும் தேர்வுக்கான விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.