கொழும்பு-மீனவர் பிரச்னை குறித்து, இந்தியா மற்றும் இலங்கை அதிகாரிகள் அடங்கிய கூட்டுப் பணிக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மீனவர்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளும்படி இலங்கைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.நம் நாட்டுக்கும், அண்டை நாடான இலங்கைக்கு இடையே உள்ள மிகப் பெரிய பிரச்னை, மீனவர்கள் பிரச்னையே. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்திய மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை கடுமையாக நடந்து கொள்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், 329 இந்திய மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படையினர், மேலும் 88 மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்துஉள்ளனர்.நீண்ட காலமாக இருந்து வரும் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, மீன்வளத் துறைகளின் கூட்டுப் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதன் கூட்டம், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக சமீபத்தில் நடந்தது. அப்போது, ‘மீனவர்கள் மீது கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது. உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்; மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்’ என, இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது
.மாலத் தீவுகள் சென்றுள்ள நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், மூன்று நாள் பயணமாக இலங்கைக்கு இன்று செல்கிறார். அப்போது, மீனவர் பிரச்னை தொடர்பாகவும் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement