முதல்-அமைச்சர் துபாய் பயணம் குறித்து அண்ணாமலை பேசுவது குழந்தை தனமாக உள்ளது: அமைச்சர் பேட்டி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் இருந்து ராஜாக்கமங்கலம் துறை மற்றும் தேவசகாயம் மவுண்ட் ஆகிய இடங்களுக்கு புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதற்கான தொடக்க விழா நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இன்று நடந்தது. விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு வழித் தடங்களில் பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே ரத்து செய்யப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்.

புதிய வழித்தடத்தில் பஸ்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ரத்து செய்யப்பட்ட பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கவும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக இந்தாண்டு 5 இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும். அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

தகவல் தொழில்நுட்ப சட்டம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற போதிலும் மாநில அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை வைத்து அதை ஒழுங்கு படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மத்திய அரசு கூறிய எதையும் நிறைவேற்றவில்லை. இதனால் மத்திய அரசு மீது மக்கள் விரக்தியில் உள்ளனர். தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, தமிழக முதலமைச்சரின் துபாய் பயணத்தை பொறுப்பற்ற முறையில் பேசியிருக்கிறார். அது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதில் எந்த உண்மையும் இல்லை என்பதை மக்கள் அறிந்து இருக்கிறார்கள்.

தமிழக முதல்வரின் துபாய் பயணத்தை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு டிரில்லியன் டாலர் முதலீட்டை 2030-ல் உருவாக்குவதற்காக ஒவ்வொரு துறை சார்ந்து அதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக மிகத் தெளிவாக திட்டமிட்டு அதற்காக முதலீட்டா ளர்களை ஈர்க்கும் வகையில் தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து அதற்கான முயற்சிகளில் முதல்வர் ஈடுபட்டுள்ளார்..

ஆனால் எந்தவித அரசியல் பக்குவம் இல்லாமல் குழந்தைத்தனமாக அண்ணாமலை போன்றவர்கள் பேசுவது பொது மக்களால் வேடிக்கையாக பார்க்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயலிகள் உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். இன்னும் ஓராண்டு காலத்திற்குள் அனைத்து இடங்களிலும் இண்டர்நெட் சேவை ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்… மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக கடைகள்-உணவு விடுதிகள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.