மேற்கு வங்க வன்முறை: ஆளுங்கட்சி பிரமுகர் உட்பட 21 பேர் மீது வழக்கு பதிவு!

மேற்கு வங்க மாநிலத்தில் 8 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், 21 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்கட் என்ற பகுதியில் உள்ள பக்டூய் என்ற கிராமத்தைச் சேர்ந்த
திரிணாமுல் காங்கிரஸ்
கட்சியின் பஞ்சாயத்து தலைவர் பகது ஷேக் என்பவர் கடந்த திங்கட்கிழமை கொல்லப்பட்டார். வீட்டிற்கு வெளியே நின்று மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்த பகது ஷேக் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார்.

பகது ஷேக்கை அதே பகுதியை சேர்ந்த சோனா ஷேக் என்பவரின் ஆதரவாளர்களே குண்டு வீசி கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பகது ஷேக் மற்றும் சோனா ஷேக் இருவருமே திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவர்கள். மணல் அள்ளி வரும் லாரிகளிடம் பணம் வாங்குவது உள்ளிட்ட செயல்களில் இருவருமே ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதனால், இவர்கள் இருவருக்கும் இடையே பணம் பங்கீடுவதில் பல ஆண்டுகளாக மோதல் நிலவி வந்துள்ளது. கடந்த ஆண்டு பகது ஷேக்கின் சகோதரன் பாபர் ஷேக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் சோனா ஷேக்கிற்கு தொடர்பு இருப்பதாக பகது குற்றஞ்சாட்டினர். இதனால், இருவருக்கும் இடையேயான மோதல் இரு தரப்பு மோதலானது.

இதற்கிடையில், திங்கட்கிழமை பகது ஷேக் கொல்லப்பட்டதால் அவரை சோனா ஷேக்கின் ஆதரவாளர்கள் தான் கொன்றிருக்கலாம் என்று அவரது ஆதரவாளர்கள் சந்தேகமடைந்தனர். இதனால், ஆத்திரமடைந்த ஷேக் ஆதரவாளர்கள் 80-க்கும் மேற்பட்டோர் பக்டூய் கிராமத்திற்கு சென்று சோனா ஷேக்கின் வீடு உள்பட 10-க்கும் மேற்பட்ட வீடுகளை தீ வைத்து கொளுத்தினர். மேலும், பெண்கள், குழந்தைகள் உள்பட கிராமத்தில் இருந்தவர்களை கடுமையாக தாக்கினர். சோனா ஷேக்கின் வீட்டில் இருந்த பெண்கள், குழந்தைகளை கோடாரியால் தாக்கி கொன்று உடலை வீட்டிற்குள் பூட்டினர். அதேபோல், சோனா ஷேக்கின் உறவினர்களான மிகிலால் ஷேக், ஃபடிக் ஷேக், பனிரூல் ஷேக் உள்பட சிலரை வீடுகளுக்குள் பூட்டி தீ வைத்து கொளுத்தினர்.

இந்த கொடூர வன்முறையில் 3 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 8 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருத்தப்படும் அனருல் ஹசன் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து சிபிஐ இந்த வழக்கை நேற்று முதல் விசாரிக்கத் தொடங்கியது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 21 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் அனருல் ஹசனிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

அடுத்த செய்திவிமானப் பயணிகளுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.