விருதுநகரில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 8 பேரின் வீடுகளிலும் சம்பவம் நடந்த மருந்து குடோனிலும் சிபிசிஐடி போலீஸார் நேற்று சோதனை செய்தனர். மேலும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் மாணவர்கள் படித்த பள்ளி ஆசிரியர்களிடமும் இந்த வழக்கை முதலில் விசாரித்த விருதுநகர் டிஎஸ்பியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
விருதுநகரில் 22 வயது பெண் கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுவர்கள் 4 பேரும் ராமநாதபுரம் கூர்நோக்கு இல்லத்திலும் மற்ற 4 பேர் ஶ்ரீவில்லிபுத்தூர் கிளைச் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 8 பேர் மீதும் சிபிசிஐடி போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி விருதுநகரில் முகாமிட்டு விசாரித்து வருகிறார். மேலும், சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியான வினோதினி, டிஎஸ்பி சரவணன் ஆகியோரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தென் மாவட்டங்களைச் சேர்ந்த சிபிசிஐடி போலீஸார் 15-க்கும் மேற்பட்டோர் 5 குழுக்களாக விசாரணை செய்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நேற்று முன்தினம் சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து வில்லிபுத்தூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேரும் மதுரை மத்திய சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் சிபிசிஐடி போலீஸார் கைதான 8 பேரின் வீடுகளுக்கு நேற்று சென்றனர். அங்கு மொபைல் போன், கணினி, பென்ட்ரைவ் உள்ளிட்ட சாதனங்கள் உள்ளனவா என்பது குறித்து சோதனை செய்தனர். மேலும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். மாண வர்கள் படிக்கும் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்கள், சக மாணவர்களிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த மருந்து குடோனிலும் சோதனை நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து விசாரணை அறிக்கை கள் அனைத்தும் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி யிடம் நேற்று பிற்பகல் தாக்கல் செய்யப்பட்டன. அதுகுறித்து டிஎஸ்பிக்கள் சரவணன், வினோதினி ஆகியோரிடம் எஸ்.பி. ஆலோ சனை நடத்தினார்.
பின்னர் இந்த வழக்கை முதலில் விசாரித்த விருதுநகர் டிஎஸ்பி அர்ச்சனாவிடமும் விசா ரணை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரிடம் சில கோப்புகளில் கையெழுத்து பெறப்பட்டது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன் உட்பட 4 பேரையும், ராமநாதபுரம் கூர் நோக்கு இல்லத்தில் உள்ள சிறுவர்கள் 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கான மனு வில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.