புதுடெல்லி: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கொரோனா விழிப்புணர்வு தொடர்பான தொலைபேசி காலர் டியூனை முடிவுக்கு கொண்டு வர ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக கடந்த 2020ம் ஆண்டு அனைத்து தொலைபேசிகளிலும் விழிப்புணர்வு காலர் டியூன் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் முககவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட பிறகு, தடுப்பூசி செலுத்துக் கொள்ளுமாறு காலர் டியூன் மூலம் மக்களிடம் வலியுறுத்தப்பட்டது.இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து விட்டது. பெரும்பாலான மக்கள் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். தற்போதும் கொரோனா விழிப்புணர்வு காலர் டியூன் தொடர்கிறது. இந்த காலர் டியூன், அவசர காலங்களில் முக்கியமான அழைப்புகளை தாமதப்படுத்துவதாகவும், இதனால் முன் அழைப்பு அறிவிப்பு மற்றும் காலர் டியூனை கைவிடுமாறு தொலைதொடர்பு துறை, ஒன்றிய சுகாதார அமைச்சகத்திற்கு சமீபத்தில் கடிதம் எழுதியது. அதில், ‘சுமார் 21 மாதங்களாக செயல்பாட்டில் உள்ள கொரோனா காலர் டியூன், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நோக்கத்தை நிறைவேற்றி உள்ளது. தற்போது அதற்கு அவசியமில்லாத நிலை உள்ளது’ என கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.