புதுடில்லி; கோவிட் பரவல் காரணமாக, இந்தியாவில் நிறுத்தப்பட்ட சர்வதேச விமான போக்குவரத்து சேவையை இன்று முதல் துவங்கியது.
கடந்த 2020 மார்ச் 23 முதல் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக விமானங்கள் இயக்கப்பட்டன. கோவிட் பரவல் குறைவு காரணமாக டிச.,15 அன்று சர்வதேச விமான போக்குவரத்தை துவக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஒமைக்ரான் பரவல் காரணமாக அது தள்ளிப்போனது.
தற்போது அனைத்து சர்வதேச போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 8-ம் தேதி இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதன் மூலம் விமான போக்குவரத்து துறை புதிய உயரத்தை எட்டும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்திருந்தார்.
விமான போக்குவரத்தை துவக்க மத்திய அரசு அனுமதி அளித்ததுடன் விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் கோவிட் விதிமுறைகள் தளர்வு செய்யப்பட்டன. அதேபோல், சமூக இடைவெளிக்காக 3 இருக்கைகள் காலியாக வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை ரத்தானது. விமான பணியாளர்கள் பிபிஇ கிட் அணிவதில் இருந்தும், விலக்கு கிடைத்தது. அதேசமயம் முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி அவசியம் எனவும் தெரிவித்துள்ளது.
தற்போது சர்வதேச விமான போக்குவரத்து துவங்கி உள்ளதால், மொரிஷியஸ், மலேஷியா, தாய்லாந்து, துருக்கி , அமெரிக்கா,ஈராக் உள்ளிட்ட 40 நாடுகளில் இருந்து 60 சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவிற்கு விமானங்களை இயக்க முடியும்.
கோடை காலம் துவங்கிய நிலையில், சர்வதேச விமானங்களுக்கான அனுமதி கிடைத்துள்ளது. முந்தைய ‛ஏர் பபுள்’ ஏற்பாட்டின்படி, விமானங்களின் எண்ணிக்கை கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. வாரத்திற்கு 2 ஆயிரம் விமானங்கள் மட்டுமே செயல்பட்டன. இதனால், கட்டணமும் அதிகரித்தது. தற்போது வழக்கமான விமானங்கள் இயக்கப்படுவதால், கட்டணங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.
Advertisement