அதிமுக ஒன்றிய, நகர, பேரூராட்சி பகுதிக் கழக நிர்வாகிகள் தேர்தல் 25 மாவட்டங்களில் இன்று நடக்கிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாள ராக ஓ.பன்னீர்செல்வமும், இணைஒருங்கிணைப்பாளராக கே.பழனிசாமியும் கடந்த ஆண்டு டிச.7-ம்தேதி மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, அமைப்புரீதியாக உள்ள 70 மாவட்டங்களில் முதற்கட்டமாக 15 மாவட்டங்களுக்கான கிளை, பேரூராட்சி, நகர,மாநகராட்சி வட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது.
இதற்கிடையே, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்நடைபெற்றதால், அதிமுக உட்கட்சித் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல்கட்டமாக, ராணிப்பேட்டை, வேலூர் -மாநகர், புறநகர், திருப்பத்தூர், திருவண்ணாமலை – வடக்கு,தெற்கு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் – புறநகர், மாநகர், தருமபுரி, கிருஷ்ணகிரி – கிழக்கு, மேற்கு, நாமக்கல், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர்- கிழக்கு, மேற்கு, திருப்பூர், திருப்பூர் புறநகர் – கிழக்கு, மேற்கு, கரூர், கோவை மாநகர், கோவை புறநகர் – வடக்கு,தெற்கு, நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர,பேரூராட்சி, பகுதிக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல் இன்று (மார்ச் 27) காலை 10 மணி முதல் நடக்கிறது.
தேர்தலில் போட்டியிட விரும்பும்கட்சியினர் விருப்பமனு விண்ணப்பக் கட்டணங்களை, சம்பந்தப்பட்டமாவட்டங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர் மற்றும் ஆணையாளர்களிடம் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சசிகலா விவகாரம், ஓபிஎஸ், இபிஎஸ் கோஷ்டி பூசல், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை உள்ளிட்ட பல்வேறு அரசியல்பரபரப்புகளுக்கிடையே உட்கட்சித் தேர்தல் நடைபெறுவதால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.