எந்த அணிக்கும் இல்லாத மிக அதிக தொகையோடு இந்தாண்டு மெகா ஏலத்தை எதிர்கொண்ட அணி பஞ்சாப். அதற்கேற்றவாறு டி20 ஃபார்மெர்டிற்கே உரிய மிக சிறந்த வீரர்களை கொண்ட பலம் பொருந்திய அணி ஒன்றையும் உருவாகியிருக்கிறது அந்த அணி நிர்வாகம். முந்தைய கேப்டன் ராகுலின் இடத்திற்குத் தற்போது புதிதாக வந்திருப்பவர் மயங்க் அகர்வால். சீனியர் வீரர் தவான் இருப்பினும் அகர்வாலுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தலைமை பொறுப்பு பஞ்சாப் அணியின் எதிர்காலத்திற்கான சிறந்த முடிவு. புதுப்பொலிவுடன் காணப்படும் பஞ்சாப் கிங்ஸின் ஸ்டார்டிங்-11-ஐ பார்த்துவிடுவோம்.
முதல் ஒப்பனராக சந்தேகமே இல்லாமல் ஷிகர் தவனை கூறிவிடலாம். எந்த அணி, எப்படியான ஆட்ட நிலவரம், உடன் ஆடும் கூட்டாளி யார் என எது எப்படி இருந்தாலும் தவானின் பேட்டில் இருந்து ரன்கள் வந்து கொண்டே தான் இருக்க போகிறது. புதிய தலைமையின் கீழ் செயல்படவிருக்கும் பஞ்சாப் அணிக்கு தவானின் அனுபவம் மிகப்பெரிய பலமாய் நிச்சயம் இருக்கப்போகிறது. இவருக்கு பார்ட்னராக இருவேறு ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது அந்த அணி. ஒன்று கேப்டன் மயங்க் அகர்வால். பஞ்சாப் அணிக்காகத் தொடர்ந்து ஓப்பனிங்கில் களமிறங்கும் இவருக்கு மாற்றாக பார்க்கப்படும் மற்றொரு வீரர் ஜானி பேர்ஸ்டோ. ஹைதராபாத் அணிக்காக அசத்தலாக பல இன்னிங்க்ஸை ஓப்பன் செய்த இவர் மற்ற பொஷிசன்களிலும் ஆடக்கூடியவர்தான். அப்படி பேர்ஸ்டோ ஓப்பன் செய்தால் மயங்க் ஒன்-டவுனில் ஆட வேண்டி இருக்கும்.
நான்காவது இடத்தில் மற்றொரு அதிரடி வீரர் லயம் லிவிங்ஸ்டன் களமிறங்குவார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றாலும் சர்வதேச அரங்கில் இவர் காட்டும் அதிரடியை இங்கும் நிகழ்த்தினால் பஞ்சாப் அணிக்கு பேருதவியாய் இருக்கும். கூடுதலாக ஆப்-ஸ்பின் , லெக்-ஸ்பின் இரண்டையும் லிவிங்ஸ்டன் வீசுவார் என்பதால் அவருக்கான இடம் நிச்சயம் உண்டு. அவருக்கு அடுத்தபடியாக அணியில் உள்ளவர் ரிஷி தவான். இவ்விடத்திற்கான போட்டியாக இளம் வீரர் ராஜ் பாவா பார்க்கப்பட்டாலும் ரிஷி தவானிற்கான வாய்ப்பே அதிகம். நடந்து முடிந்த விஜய் ஹசாரே தொடரில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஹிமாச்சல் பிரதேஷ் அணிக்கு தலைமை தாங்கி மிகப்பெரிய பங்களிப்பு செய்து கோப்பை வெல்ல செய்துள்ளார். அவரின் தற்போதைய ஃபார்ம் மற்றும் அனுபவம் பஞ்சாப் அணிக்கு நிச்சயம் தேவை.
ஓர் தீர்மானமான திட்டத்தோடு தொடரை தொடங்காமல் அணி காம்பினேஷனை தொடர்ந்து மாற்றி குழப்புவது பஞ்சாப் அணியின் அக்மார்க் வழக்கம். ஆனால், இம்முறை யாரை ஆடவைக்கிறார்களோ இல்லையோ ஷாரூக் கானை 14 ஆட்டங்களிலும் நிச்சயம் ஆட வைக்க வேண்டும் பஞ்சாப். சமீபத்திய உள்ளூர் தொடர்களில் அவர் காட்டியுள்ள ஃபெர்பார்மன்ஸ் ஷாரூக் கானின் இடத்தை உறுதி செய்கிறது. உள்ளூரில் ஷாரூக் செய்வதை சர்வதேச அரங்கில் நிகழ்த்தி வரும் ஓடியன் ஸ்மித்திற்கு அணியில் 7-வது இடம். இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலியையே தடுமாறு வைத்த அவரின் பந்துவீச்சும் பஞ்சாப் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். இவ்வாறாக பஞ்சாப் அணியின் பேட்டிங் யூனிட் முடிவுக்கு வருகிறது.
வேகப்பந்துவீச்சாளர்களாக ககிஸோ ரபடா மற்றும் அர்ஷிதீப் சிங் எந்த சந்தேகமும் இல்லாமல் இடம் பெற்றுவிடுகின்றனர். முதல் ஸ்பின்னராக ராகுல் சஹர் மற்றொரு பௌலராக சந்தீப் சர்மா பரிசீலிக்கப்பட்டாலும் இரண்டாவது ஸ்பின்னராக ஹர்ப்ரீத் ப்ராருக்கே அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறாக பஞ்சாப் கிங்ஸின் ஸ்டார்டிங்-11 முடிவுக்கு வருகிறது.
Punjab Kings- Starting 11: ஷிக்கர் தவான், மயங்க் அகர்வால் (c), ஜானி பேர்ஸ்டோ (wk), லயம் லிவிங்ஸ்டன், ரிஷி தவான், ஷாரூக் கான், ஓடியன் ஸ்மித், ஹர்ப்ரீத் ப்ரார், ககிஸோ ரபடா, ராகுல் சஹர், அர்ஷ்தீப் சிங்.