PBKS vs RCB: டு ப்ளெஸ்ஸி அதிரடி வீண்… ஆர்சிபி தவறவிட்ட கேட்சால் கேமையே மாற்றிய ஓடியன் ஸ்மித்!

பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மோதிய போட்டி மும்பையிலுள்ள DY பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்தது. கிட்டத்தட்ட 2011-க்குப் பிறகு இந்த ஸ்டேடியத்தை ஐபிஎல்லுக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார்கள் என்பது ஒரு ‘வாவ்’ செய்தி. இந்தப் போட்டி பெங்களூர் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது சென்னை ரசிகர்களின் மனதுக்கும் நெருக்கமானது. காரணம் அவர்களின் எக்ஸ் எல்லைச்சாமி ஃபாஃப் டு ப்ளெஸ்ஸி இப்போது ஆர்சிபி-யின் கேப்டன். டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால், ‘நாங்கள் ஃபர்ஸ்ட் பௌலிங்’ என்று கையைத் தூக்கினார்.

பெங்களூர் பிளேயிங் XI: ஃபாஃப் டு ப்ளெஸ்ஸி, அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு, விராட் கோலி, டேவிட் வில்லி, வனிந்து ஹசரங்கா, ஷபாஷ் அகமத், ஹர்சல் படேல், முகமத் சிராஜ், ஆகாஷ் தீப்

பஞ்சாப் பிளேயிங் XI: மயங்க் அகர்வால், ஷிகர் தவான், லயம் லிவிங்ஸ்டன், பனுகா ராஜபக்ஷ, ஓடியன் ஸ்கித், ஷாருக்கான், ராஜ் பவா, அர்ஷ்தீப் சிங், ஹர்ப்ரீத் ப்ரார், சந்தீப் சர்மா, ராகுல் சஹார்

ஃபாஃப் டு ப்ளெஸ்ஸி | PBKS vs RCB

கோலி எப்போதும் விருப்பப்படும் அந்த ஓப்பனிங் ஸ்லாட் அவரின் 200வது இன்னிங்ஸில் கிடைக்குமா என ரசிகர்கள் எதிர்பார்க்க, இல்லை ஒன்டவுன்தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கேப்டன் ஃபாஃப் டு ப்ளெஸ்ஸியும், இளம் வீரரான அனுஜ் ராவத்தும் களமிறங்கினர். ஐபிஎல்லில் அனுபவம் வாய்ந்த சந்தீப் சர்மா முதல் ஓவரை அவருக்கே உரிய துல்லியத்துடன் வீசினார். நல்ல மூவ்மென்ட்டும் இருந்ததால் டு ப்ளெஸ்ஸி திணறினார். முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே வந்தது. இரண்டாவது ஓவர் வீச வந்த அர்ஷ்தீப்பின் பந்தும் ஸ்விங்காக அதுவே அவருக்குப் பிரச்னையாகி போனது. லைன் கிடைக்காத பந்துகள் ‘பை’யாக மாறி பெங்களூரின் ஸ்கோரை உயர்த்தின.

அடுத்த ஓவர் மீண்டும் சந்தீப். இந்த முறை அவரின் கை ஓங்ககூடாது என்று ஆடிய டு ப்ளெஸ்ஸியும், அனுஜ் ராவத்தும் முறையே ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸர் என அடித்து பிரஷர் ஏற்றினர். அதிலும் துளி பயமும் இல்லாமல், அனுஜ் பிட்ச்சில் நடந்து வந்து சிக்ஸர் அடித்தது ‘வாக்கிங் அசாசின்’ மோடில் இருந்தது.

இது வேலைக்காகாது என மயங்க் நினைத்தாரோ என்னவோ மூன்றாவது ஓவரிலியே ஓடியன் ஸ்மித்திடம் பந்தைக் கொடுத்தார். இந்த ஐபிஎல்லில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒரு ஆல்ரவுண்டர் என்பதால் பஞ்சாப் ரசிகர்கள் பாப்கார்னை வைத்துக்கொண்டு உட்கார்ந்தார்கள். ஃபாஃப் கொடுத்த கஷ்டமான கேட்ச் டிராப்பானதோடு 2 ரன்கள் மட்டுமே அந்த ஓவரில். அடுத்து அர்ஷ்தீப் தன் எண்டை மாற்றிக்கொண்டு போட்ட ஓவரில் 6 ரன்கள். பவர்பிளேயின் கடைசி ஓவரை ஓடியன் வீச, பவர்பிளே என்பதே ஞாபகம் இல்லாத வகையில் மூன்று டாட் பால்கள். மீண்டும் ஒரு கேட்ச் டிராப்பாக, நினைவுக்கு வந்தவராய் கடைசி 2 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார் அனுஜ் ராவத். பவர்பிளே முடிவில் பெங்களூர் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள்.

அனுஜ் ராவத் | PBKS vs RCB

7வது ஓவரில் பந்தைச் சுழற்ற வந்தார் ராகுல் சஹார். அந்த ஓவரின் கடைசி பந்து வழக்கமான வேகத்தைத் தாண்டி கொஞ்சம் ஸ்பீடாக வர, கணிக்கத் தவறிய அனுஜ் ராவத் தன் ஸ்டம்புகளை பரிதாபமாக இழந்தார். 20 பந்துகளில் 21 ரன்கள் என்ற கணக்குடன் நடையைக் கட்டினார். அடுத்து கேப்டன் கோலி ஃபாஃபுடன் இணைந்து ஒரு நல்ல அடித்தளத்தைக் கட்டமைக்கத் தொடங்கினார்.

10வது ஓவரில் கோலி இறங்கிவந்து ஸ்ட்ரெய்ட்டில் அடித்த சிக்ஸ் கண்கொள்ளா காட்சியாக அமைய, ‘இதுக்கு 12 ரன்கள் தரலாமே பாஸ்’ என கோலி ரசிகர்கள் சண்டையிட்டனர். 2016-க்கு முன்பான விராட் திரும்ப வந்துவிட்டார் என முன்னாள் ரசிகர்கள் பலர் விளம்பரம் வந்தாலும் டிவியை மாற்றாமல் அமர்ந்தார்கள்.

கோலி | PBKS vs RCB

ரன்ரேட் 7-க்கு குறைவாகச் சென்று கொண்டிருந்ததை டு ப்ளெஸ்ஸ்யிடம் யாரோ சொல்லிவிட, லியம் லிவிங்ஸ்டன் வீசிய 12-வது ஓவரில் ஒரு சிக்ஸர், ஓடியன் ஸ்மித் வீசிய 13-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என கியரை மாற்றினார் ஃபாஃப். கோலியும் அந்த ஓவரில் ஒரு பவுண்டரியை அடித்திருந்தார். அந்த ஓவரே டு ப்ளெஸ்ஸியின் அரைசதமும் வந்தது. ஏபிடி இல்லாத குறையை இந்த எல்லைச்சாமி தீர்த்துவைக்க ஆர்சிபி ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். ‘இதுக்கே எமோஷனானா எப்படி’ என்பது போல, அடுத்து ஹர்ப்ரீத் ப்ராரின் ஓவரில் அடுத்தடுத்து மீண்டும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டார் டு ப்ளெஸ்ஸி. கோலியும் ‘நான் ஒண்ணு அடிச்சிக்கிறேன் பாஸ்’ என ப்ராரின் தலைக்கு மேலேயே பந்தைப் பறக்கவிட்டார்.

கேப்டன் மயங்க் அகர்வாலின் வியூகம்தான் வித்தியாசமாக இருந்தது. ஆட்டம் 9வது ஓவரைக் கடக்கும்போதே அவர் 5 பௌலர்களைப் பயன்படுத்தியிருந்தார். ‘ஆளுக்கு 2 ஓவர் போட்டுட்டு வந்தரணும்’ என்ற கணக்கில் அடுத்தடுத்து பௌலர்கள் வந்தவாறே இருந்தனர். ஆட்டத்தின் போக்குக்கு ஏற்றவாறு தன் வியூகத்தை மாற்றாமல், தன் பிளானை விடாப்பிடியாகச் செயல்படுத்திக் கொண்டிருந்தார் மயங்க்.

ஆனால் டு ப்ளெஸ்ஸ்யின் அதிரடி அவரை அச்சம்கொள்ள வைக்க, மீண்டும் பந்து ராகுல் சஹாரிடம் சென்றது. அவர் வீசிய 15வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே வந்தன. ஆனால், அடுத்த அர்ஷ்தீப் ஓவரில் மீண்டும் 2 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார் டு ப்ளெஸ்ஸி. ஆர்சிபி அசால்ட்டாக 150 ரன்களைக் கடந்தது. அதே கோபத்தில் தன் அடுத்த ஓவரில் அர்ஷ்தீப் ஃபாஃபின் விக்கெட்டைத் தூக்கினார். சதமடிப்பார் என பெங்களூர் ரசிகர்களைவிட சென்னை ரசிகர்கள் காத்துக் கிடக்க, 88 ரன்களில் ஷாருக்கானிடம் லாங்க் ஆஃபில் கேட்ச் கொடுத்து அவுட்டானார் கேப்டன் ஃபென்டாஸ்டிக்.

ஃபாஃப் டு ளெஸ்ஸி | PBKS vs RCB

கண்டம் முடிந்தது என பஞ்சாப் ரசிகர்களின் பதற்றம் சற்றே தணிய, ‘மே ஐ கம் இன்?’ என உள்ளே வந்தார் டிகே. அவர் அட்டாக் செய்தது ஓடியன் ஸ்மித் வீசிய 19வது ஓவரை. இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரி என ருத்ரதாண்டவம் ஆடினார் டிகே. ஓடியன் ஸ்மித்தின் முதல் ஐபிஎல் மேட்ச், ஆனால் அவர் 4 ஓவர்கள் வீசி 52 ரன்களை வாரிக் கொடுத்திருந்தார். ‘சரி, பேட்டிங்கில் பார்த்துக்கலாம்’ என ஆறுதல்பட்டுக்கொண்டார்.

இறுதி ஓவரில் சந்தீப் சர்மாவையும் விட்டு வைக்கவில்லை டிகே. ஒரு சிக்ஸர் இரண்டு பவுண்டரிகள் அதில் வந்தன. கோலி அரைசதம் அடிப்பார் என எல்லோரும் காத்திருக்க அவரோ டிகேயின் அதிரடியை ரசித்தவாரே ஸ்ட்ரைக்கை அவருக்கே ரொட்டேட் செய்தார். இறுதியில் ஆர்சிபி 2 விக்கெட்கள் இழப்புக்கு 205 ரன்களைக் குவித்தது. டிகே 14 பந்துகளில் 32 ரன்கள் அடித்திருக்க, கோலி 29 பந்துகளில் 41 ரன்கள் அடித்திருந்தார்.

206 ரன்கள் சற்றே கடினமான இலக்கு. ஆர்சிபி வெற்றிப் பெற்றுவிடும் என ஒரு பக்கம் தோன்றினாலும், ‘சோக்கர்ஸ்’ எனப் பெயரெடுத்த அவர்கள் தோற்பதற்கு எப்படியேனும் ஒரு வழியைக் கண்டடைவார்கள் என்ற பயம் பெங்களூர் ரசிகர்களுக்கே இருந்திருக்கும். இருந்தும் புதிய கேப்டன் ஃபாஃப் வெற்றியுடன் தொடங்குவார் என்ற நம்பிக்கை நிரம்பி வழிந்தது.

பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால், சீனியரான ஷிகர் தவானுடன் களத்தில் இறங்கினார். டேவிட் வில்லியிடம் ஃபாஃப் பந்தைக் கொடுக்க முதல் ஓவரில் தவான் ஒரு பவுண்டரி அடிக்க, மொத்தம் 7 ரன்கள் வந்தன. அடுத்து செம ஃபார்மிலிருக்கும் பெங்களூரின் ஆஸ்தான பௌலர் சிராஜ் வந்தார். ஆனால், அவர் லைன் அண்டு லெந்தில் அதிகமாகத் தடுமாற, இரண்டு வைடு பவுண்டரிகள், மயங்க் பேட்டிலிருந்து வந்த ஒரு பவுண்டரி என அந்த ஓவரில் 15 ரன்கள். அடுத்த சிராஜ் ஓவரிலும் 14 ரன்கள். அதே மயங்க் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என அதிலொன்று இதிலொன்று என சேம்பிள் பார்த்திருந்தார்.

மயங்க் அகர்வால் | PBKS vs RCB

அதுவரை கட்டுக்கோப்பாக வீசிவந்த டேவிட் வில்லி, தனது 3வது ஓவரில், தன் பங்குக்கு 15 ரன்களைக் கொடுத்திருந்தார். மயங்க் ஒரு சிக்ஸர் அடிக்க, தவான் 2 பவுண்டரிகள் அடித்திருந்தார். அதில் ஒரு பவுண்டரி, இதுவரை தவான் அடித்திராத ஸ்டைலில் புதிதாக இருந்தது. கொசுறு செய்தியாக தவான்தான் இதுவரை மொத்த ஐபிஎல்லிலும் அதிக பவுண்டரிகள் அடித்தவராம். எண்ணிக்கை 656-ஐ தாண்டிச் சென்றுவிட்டது. ஓவருக்கு மாற்றி மாற்றி பவுண்டரிகள் வர, பஞ்சாப் பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 71 ரன்கள் என இமாலய எண்களைத் தொட்டிருந்தது. ஆர்சிபி ரசிகர்களுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.

பவர்பிளே முடிந்த அடுத்த ஓவரே லெக் ஸ்பின்னர் வனிந்து ஹசரங்கா அட்டெண்டன்ஸ் போட, முதல் பந்திலேயே கேப்டன் மயங்க் அகர்வாலை 32 ரன்களுக்குத் தூக்கினார். அவர் வீசிய கூக்ளியை நின்று நிதானமாக மயங்க் அடிக்க, ஷபாஷ் அகமத் ‘சபாஷ்’ என்று சொல்லும் அளவுக்கு அதை டைவ் அடித்து பிடித்து பஞ்சாப் கோதுமை மில்கள் பக்கம் சென்றுகொண்டிருந்த கேமை பெங்களூர் டோல் பூத் அருகே கொண்டு வந்தார். அந்த ஓவரில் 4 ரன்கள்தான்.

இதற்காகவே காத்திருந்தது போல கேப்டன் ஃபாஃப் தன் ட்ரம்ப் கார்டான ஹர்ஷல் பட்டேலை இறக்கினார். இலங்கை வீரர் மற்றும் பஞ்சாபின் கீப்பரான ராஜபக்,ஷ ஹர்ஷலை சிக்ஸருடன் வரவேற்றார். அதற்கடுத்து தன் இலங்கை டீம்மேட்டான ஹசரங்காவின் ஓவரில் ராஜபக்ஷ ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டர் விளாசினார். நெட்ஸில் பழக்கப்பட்ட பௌலிங் என்பதால் நன்றாகவே அவரைக் கணித்து ஆடினார். 10 ஓவர் முடிவில் பஞ்சாப் ஒரு விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எனக் கிட்டத்தட்ட பாதி கிணற்றைத் தாண்டியிருந்தது.

ஹர்ஷல் பட்டேல் | PBKS vs RCB

அதற்கடுத்த ஓவருக்கு ஹர்ஷல் பட்டேலிடமே செல்லாமல் ஆகாஷ் தீபிடம் செல்ல, அதன் விளைவாக 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி வந்து சேர்ந்தன. இதைத் தவறு என உணர்ந்த ஃபாஃப் மீண்டும் ஹர்ஷலிடமே வர, அந்த பர்பிள் படேல், தவானை 43 ரன்களுக்கு வழியனுப்பி வைத்தார். கீப்பிங் செய்யாமல் கிரவுண்டில் ஃபீல்டராகச் சுற்றிக்கொண்டிருந்த அனுஜ் ராவத் தவான் கொடுத்த கேட்சை லாகவமாகப் பிடித்திருந்தார். சரி, ஹர்ஷல் டெத் ஓவருக்கு வேண்டுமே, அதனால் மீண்டும் ஒரு ஓவர் ஹசரங்காவுக்குக் கொடுக்கலாம் என பெங்களூர் அந்தப் பக்கம் சென்றது. ஆனால், அந்த ஓவரில் லிவிங்ஸ்டனும், ராஜபக்ஷவும் ஆளுக்கொரு சிக்ஸரைப் பறக்கவிட, 17 ரன்கள் வந்தன.

சிராஜ் | PBKS vs RCB

அடுத்த ஓவர், முதல் ஸ்பெல்லில் வாரி வழங்கிய சிராஜ். பெங்களூரு ரசிகர்கள் சரி டிவியை ஆஃப் செய்துவிடலாம் என்ற முடிவுக்கே வந்தபோதுதான் அந்த மேஜிக் நடந்தது. சத்தமில்லாமல் 43 ரன்களை அடித்திருந்த ராஜபக்ஷவையும், அடுத்து இறங்கிய அண்டர் 19 புகழ் பவாவையும் அடுத்தடுத்து பெவிலியனுக்கு அனுப்பினார் சிராஜ். அதிலும் பவா ஃபுல்டாஸ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனது சோகமான நிகழ்வாகிப் போனது. அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்படும் தமிழக வீரர் ஷாருக்கான் களம் கண்டார். அதற்கடுத்த ஓவரில் ஆகாஷ் தீப், லிவிங்ஸ்டனை 19 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார். மீண்டும் ஒரு அட்டகாசமான கேட்சைப் பிடித்திருந்தார் அனுஜ் ராவத். இப்போது ஷாருக்கானுடன் ஜோடி சேர்ந்தார் ஓடியன் ஸ்மித்.

விக்கெட் வேண்டும் என ஹசரங்காவை மீண்டும் கொண்டுவந்தார் ஃபாஃப். 4 டாட் பால்கள் பிரஷர் ஏற்ற, 5வது பாலை சிக்ஸராக ஹசரங்காவின் தலைக்கு மேலேயே தூக்கிவிட்டார் ஷாருக். இருந்தபோதும் அந்த ஓவரில் வெறும் 6 ரன்கள்தான்.

இப்போது பஞ்சாப் வெற்றிப் பெற 24 பந்துகளில் 44 ரன்கள் தேவை. கைவசம் 5 விக்கெட்கள். மீண்டும் ஹர்ஷல். விக்கெட் விழுந்துவிடும் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் தெரிந்தது. அதற்கான வாய்ப்பும் வந்தது. ஓடியன் ஸ்மித் அடித்த பந்து அனுஜ் ராவத்திடம் கேட்சாக மாறப்போக, கஷ்டமான கேட்சைக் கூட பிடித்திருந்த அவர், இந்தச் சுலபமான கேட்சை அதிர்ச்சிகரமாகத் தவறவிட்டார். டியூ அதற்கொரு முக்கியமான காரணமாக இருந்திருக்கலாம். 10 ரன்களை மட்டுமே அப்போது எடுத்திருந்தார் ஓடியன். ஆனால், அந்த கேட்ச் டிராப்பினால் அதன்பிறகு ஆட்டமே மாறிப்போனது.

கூடுதல் இடியாக, ஹர்ஷல் தன் அடுத்த ஓவரில் ஃபீல்டர் வீசிய பந்தை மெதுவாக கலெக்ட் செய்து நல்ல நேரம் எல்லாம் பார்த்த பின்னரே ஸ்டம்பைத் தகர்த்தார். அதற்குள் ஸ்மித் டைவ் அடித்து ரீச்சாகி எழுந்தே நடந்து போய்க்கொண்டிருந்தார். நன்றாக பந்து வீசினால் மட்டும் போதாது ஹர்ஷல். இந்த வாய்ப்புகளைத் தவற விடலாமா?

ஷாருக்கான் | PBKS vs RCB

18 பந்துகளில் 36 ரன்கள் தேவை என்ற நிலையில் சிராஜ் 18-வது ஓவரை வீச வர, ஸ்மித் தான் வாரிக்கொடுத்த ரன்களுக்குப் பழித்தீர்க்க முடிவு செய்தார். அந்த ஓவரில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி. போதாக்குறைக்கு 2 எக்ஸ்ட்ராக்கள் வேறு. 12 பந்துகளில் 11 ரன்கள் தேவை என வந்து நின்றது மேட்ச். இனி என்ன… ஹர்ஷலே போட்டாலும் மிராக்கிள் சாத்தியமில்லைதான். ஷாருக்கான் தன் பங்குக்கு ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடிக்க, பஞ்சாப் அணி 19-வது ஓவரின் முடிவிலேயே 208 ரன்கள் குவித்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது.

“ஓடியன் ஸ்மித் 10 ரன்களில் இருக்கும்போது அவரின் கேட்சைத் தவறவிட்டோம். அவர் நின்றுவிட்டால் என்ன செய்வார் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே அப்படியான வாய்ப்புகளைத் தவறவிடவே கூடாது” எனப் போஸ்ட் மேட்ச் பிரசடேஷனில் பேசினார் கேப்டன் ஃபாஃப். உண்மைதான். அதோடு 22 எக்ஸ்ட்ராஸ் எனத் தாராளம் காட்டியது, ஸ்மித் கேட்ச் மற்றும் ரன் அவுட் வாய்ப்பைத் தவறவிட்டது என பௌலிங்கிலும், ஃபீல்டிங்கிலும் பெங்களூர் நிறையவே முன்னேற வேண்டியிருக்கிறது.

ஆனால், இப்படியொரு மேட்ச்சையும் பெங்களூரால் மட்டுமே 6 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் தோற்க முடியும். மொத்தத்தில் நேற்று ‘கே.ஜி.எஃப் 2’ ட்ரெய்லர் வெளியானது மட்டுமே பெங்களூருக்கான ஒரே ஆறுதல்!

ஐபிஎல் 2022-ல் இதுவரை மூன்று மேட்சுகள் முடிந்திருக்கின்றன. அதில் பங்காளிகளான சென்னை, மும்பை மற்றும் பெங்களூர் இதுவரை தோற்றுள்ளன. இது ஒரு சுவாரஸ்யமான ஐபிஎல்லாக இருக்கப்போகிறது என்பதற்கான ட்ரெய்லரா இது? பொறுத்திருந்து பார்ப்போம்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.