கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சகோதரிகளுக்கிடையேயான சொத்து தகராறில் இரு தரப்பும் போலீசார் முன்னிலையில் பெரிய பெரிய கற்களை வீசி தாக்கிக் கொண்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த சுங்கான்கடை யை சேர்ந்த அம்மு அன்டோ, லதா சந்திரன் ஆகிய இருவரும் அக்காள் தங்கைகள். இவர்களுக்கு பூர்வீக சொத்து தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இருவரும் எதிரும் புதிருமான அரசியல் கட்சியில் பொறுப்பில் இருந்து கொண்டு தங்கள் ஆதரவாளர்களுடன் மோதிக் கொள்வது வழக்கம்.
அந்தவகையில் சம்பவத்தன்று அம்மு அண்டோ தனது கணவர் உள்ளிட்ட உறவினர்கள் 20 பேருடன் லதா சந்திரனின் வீட்டிற்கு தகராறு செய்ய வந்ததாகவும், அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தியதால வீட்டு முன்பு நின்று ஆபாசமாக பேசிக் கொண்டு நின்றுள்ளனர்.
அப்போது லதா சந்திரனின் வீட்டுக்குள் இருந்து அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பெரிய பெரிய அளவிலான கற்களை எடுத்து வீசிக் கொண்டே வெளியில் வந்தனர்
தங்களை தாக்கியதால் அம்மு அண்டோ தரப்பும் பதிலுக்கு தாக்கியது இருதரப்பும் போலீசார் முன்னிலையில் பயங்கரமாக மோதி கட்டிப்புரண்டனர்.
சைக்கிளை தூக்கி வீசி தாக்கிய நிலையில் அந்த சைக்கிளை வைத்து கற்களை தடுத்தனர். இத்தனை களேபாரத்துக்கும் நடுவில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் இரு தரப்பையும் சமாதானம் செய்ய படாத பாடுபட்டார்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சியினை கைப்பற்றிய போலீசார் இருதரப்பிலும் 24 பேர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இரு தரப்பிலும் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் வேறு வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்கு பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.