அடுத்தடுத்து தீப்பற்றி எரியும் மின்சார வாகனங்களால், வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க வரிச்சலுகையை வழங்கி வருகிறது மத்திய அரசு. ஆனால், அடுத்தடுத்து ஏற்பட்ட இருசக்கர மின்சார வாகனங்களின் தீ விபத்தால் வாடிக்கையாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்தியாவில், கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மின்சார வாகனங்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், வேலூர் மாவட்டம் அல்லாபுரம் சாலையில் இருசக்கர மின்சார வாகனத்திற்கு சார்ஜ் போட்டபோது ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டில் இருந்த தந்தை, மகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த அதிர்ச்சி நீங்குவதற்குள் மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலும், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. இந்த வீடியோ வேகமாக பரவி, இருசக்கர மின்சார வாகன வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல, கடந்தாண்டு ஹரியானா மாநிலம் குருகிராமில் சார்ஜ் போட்டிருந்தபோது இருசக்கர மின்சார வாகனம் தீப்பற்றியதில் 60 வயது ஆண் உயிரிழந்தார். மும்பையின் அந்தேரி, ஹைதராபாத் மற்றும் தமிழகத்தின் மதுரை மாவட்டத்திலும் மின்சார வாகனம் தீப்பிடித்து எரிந்தது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிபொருள் தேவையை குறைப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு வரிச்சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனிடையே அடுத்தடுத்து ஏற்பட்ட இருசக்கர மின்சார வாகனங்களின் தீ விபத்து, வாடிக்கையாளர்கள் மின்சார வாகனங்களை நோக்கி நகர்வதில் ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை எவ்வாறு இருக்கிறது. உலக அளவில் மின்சார வாகனங்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நாடுகள் குறித்த விவரங்கள்
2021ல் மட்டும் சுமார் 3.13 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இந்தியாவில் 5 ஆண்டுகளில் 20க்கும் அதிகமான நிறுவனங்கள் மின்சார வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. நாட்டில் இதுவரை 9,66,363 மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இருசக்கர மின்சார வாகனங்கள் 2,82,542, நான்கு சக்கர மின்சார வாகனங்கள் 26,335 விற்பனை செய்யப்பட்டுள்ளன. உலக அளவில் மின்சார வாகனங்கள் விற்பனையில் சீனா முதலித்தையும், அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா, ஜெர்மனி, கலிபோர்னியா, பிரான்ஸ், நார்வே, நெதர்லாந்து, ஸ்வீடன், ஜப்பான், கனடா ஆகிய நாடுகளும் மின்சார வாகனங்கள் விற்பனையில் முன்னிலையில் உள்ளன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM