நாட்டு மக்கள் உணவுக்கு முக்கியத்தும் கொடுக்காமல் நாட்டை மீட்க முன்னுரிமை வழங்க வேண்டும் என அமைச்சர் மஹிந்தானந்த தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் பாரிய அழுத்தங்களுக்குள்ளாகியிருப்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளதாகவும், இது தொடர்பில் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடியானது அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட நெருக்கடியல்ல. அதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய விவசாய அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மக்களும் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும். வயிற்றுக்கு என்ன கிடைக்கும் என்பதை மாத்திரம் சிந்திக்காமல் நாட்டுக்கு என்ன கிடைக்கும் என்பதை மாத்திரம் சிந்திக்க வேண்டும்.
அரசாங்கத்தை திட்டுவது, அல்லது அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வதற்கு உயிர் மீதமாக இருப்பதற்கு அரசாங்கம் வழங்கிய தடுப்பூசி காரணம் என்பதனை இன்று பலரும் மறந்து விட்டனர்.
எரிபொருள் நெருக்கடி, எரிவாயு நெருக்கடி, அத்தியாவசிய உணவு நெருக்கடி உள்ளிட்ட அனைத்து நெருக்கடிகளும் விரைவில் தீர்க்கப்படும்.
அதற்கான நடைமுறை திட்டம் அரசாங்கத்திடம் உள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என அமைச்சர் கூறிய கருத்து மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், உயிரிழப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு என்ற கேள்வியையும் அரசாங்கத்திடம் கேட்டுள்ளனர்.