பாகிஸ்தானில் தனது அரசை கவிழ்க்கும் முயற்சியில் வெளிநாட்டுச் சதி இருப்பதாக பிரதமர் இம்ரான்கான் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு இம்ரான்கான் தலைமையிலான அரசின் செயல்பாடுகளே காரணம் என்பது பாகிஸ்தான் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இம்ரான் கானுக்கு அவரது கட்சியிலேயே எதிர்ப்பு வலுத்திருப்பதால் தனது ராஜினாமா முடிவை அவர் அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தச் சூழலில் திடீர் திருப்பமாக இஸ்லாமாபாத்தில் இம்ரான் கான் நடத்திய பொதுக்கூட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். அப்போது உரையாற்றிய அவர், தனது அரசை கவிழ்க்கும் முயற்சியில் வெளிநாட்டுச் சதி உள்ளதாகவும் இதற்கான ஆதாரமாக கடிதம் ஒன்று தமக்கு கிடைத்திருப்பதாகவும் தெரிவித்தார். வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த சதி நடப்பதாக கூறிய இம்ரான்கான், வெளிநாட்டு அதிகார வர்க்கங்கள் உள்ளூர் அரசியல்வாதிகளை பயன்படுத்தி தமக்கு நெருக்கடி கொடுக்க நினைப்பதாக குற்றஞ்சாட்டினார்.
342 இடங்களை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 172 உறுப்பினர்கள் தேவை. ஆனால் இம்ரான்கான் கட்சிக்கு 155 உறுப்பினர்களே உள்ளனர். கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி சொந்த கட்சி எம்பிக்கள் சிலரும் இம்ரான்கானுக்கு எதிராக திரும்பியுள்ளனர். இந்த சூழலில் எதிர்க்கட்சிகளே எதிர்பாராத அளவுக்கு இஸ்லாமாபாத்தில் பெருங்கூட்டம் கூடியதால், இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிக்க: “புடின் ஒரு கசாப்புக் கடைக்காரர்” – கடுமையாக சாடிய ஜோ பைடன்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM