மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள ஷேகானில் நடைபெற்ற (ஓ.பி.சி) கூட்டத்தில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், மகாராஷ்டிர அமைச்சர் யஷோமதி தாகூர், மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல், ஏ.ஐ.சி.சி செயலாளர் ஆஷிஷ் துவா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
அப்போது பேசிய சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், “ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நாங்கள் போராடுகிறோம். ஆனால், மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு இடஒதுக்கீட்டுக்கு எதிரானது ஏன் தெரியுமா? அரசு வேலைகளுக்கு மட்டும் ஒதுக்கீடு பலன்களை அளிக்கிறது. ஆனால், மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு நாட்டுக்குச் சொந்தமான நிறுவனங்களை விற்றுக் கொண்டிருக்கிறது.
ரயில்வே, விமான நிலையங்கள், ஏர் இந்தியா போன்ற நிறுவனங்களை அரசாங்கம் விற்பனை செய்கிறது. பொது நிறுவனங்கள் இல்லாவிட்டால், இடஒதுக்கீட்டுப் பலன்களை ஒருவர் எப்படிப் பெறுவார்? சம்பந்தப்பட்ட சமூகங்கள் இடஒதுக்கீடு பலன்களைப் பெறக்கூடாது என்பதற்காக, பா.ஜ.க அரசு இந்த நிறுவனங்களை விற்கிறது.
இடஒதுக்கீட்டின் பலன்களை மக்கள் பெறாமல் இருக்க பெரிய சதி தீட்டப்படுகிறது. காங்கிரஸ் எப்போதும் பட்டியலின, பழங்குடியினர் மற்றும் ஓ.பி.சி பிரிவினரை ஆதரிக்கிறது. ஆனால் மத்திய பா.ஜ.க அரசு ஓ.பி.சி-யினரின் பல்வேறு கோரிக்கைகளை புறக்கணிக்கிறது” என்றார் காட்டமாக.