புதுடெல்லி: இந்திய தயாரிப்புகளுக்கான தேவை உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித் துள்ளார். ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில், வானொலியில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மக்களுடன் உரையாடி வருகிறார். நேற்று இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியா கடந்த வாரத்தில் 400 பில்லியன் டாலர் (30 லட்சம் கோடி ரூபாய்) ஏற்றுமதி இலக்கை எட்டியிருக்கிறது. ஒரு காலத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 200 பில்லியன் டாலருக்குள்ளாகவே இருந்தது. தற்போது ஏற்றுமதி 400 பில்லியன் டாலரை எட்டி சாதனைப் படைத்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான தேவை உலகெங்கிலும் அதிகரித் திருக்கிறது என்பதையும் தேசத்தின் விநியோகச் சங்கிலி பலமடைந்து வருகிறது என்பதையும் இது உணர்த்துகிறது. இந்த சாதனைக்கு, நமது விவசாயிகள், நெசவாளர்கள், சிறு குறு தொழில்முனைவோர்கள் ஆகியோரின் கடின உழைப்புதான் காராணம். அவர்களால்தான் உள்ளூர் தயாரிப்புகள் இப்போது உலக அளவில் செல்கின்றன.
ஏராளமான புதிய பொருட்கள் இப்போது வெளிநாடுகளுக்குச் செல்கின்றன. அசாமின் ஹைலா காண்டியின் தோல் பொருட்கள், உஸ்மானாபாதின் கைத்தறிப் பொருட்கள், பீஜாபூரின் பழங்கள்-காய்கறிகள், சந்தௌலியின் கறுப்பு அரிசி என நாட்டின் வெவ்வேறு பிராந்தியங்களிலிருந்து பல வகையானப் பொருட்கள் வெளி நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்று மதியாகி வருகின்றன. லடாக்கின் ஆப்ரிகாட் பழங்கள் துபாயிலும், தமிழ்நாட்டின் வாழைப்பழங்கள் அரேபியாவிலும் கிடைக்கின்றன.
ஒவ்வொரு இந்தியரும் உள் நாட்டு தயாரிப்புக்கு ஆதரவு கொடுக்கும்போது நம்முடைய உள்ளூர் தயாரிப்புகளை உலக அளவில் சென்று சேர்வதற்கு நீண்டகாலம் ஆகாது. வாருங்கள், உள்நாட்டு தயாரிப்புகளை உலக முழுவதும் கொண்டு செல்வோம். அரசு மின்னணு சந்தைப்படுத்தல் போர்ட்டல் (Government e-Marketplace) மூலம் கடந்த ஓராண்டில் மத்திய அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருட்களை வாங்கியிருக்கிறது.
1.25 லட்சம் சிறிய தொழில்முனை வோர்கள், கடைக்காரர்கள் நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்து தங்கள் பொருட்களை அரசுக்கு விற்பனை செய்துள்ளனர். இந்தப் போர்ட்டல் சந்தைப்படுத்துதலில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வந்துள்ளது. பெரிய நிறுவனங்கள் மட்டுமே அரசுக்குப் பொருட்களை விற்கமுடியும் என்ற சூழல் இருந்தது. ஆனால் இப்போது சிறிய கடைக்காரர்களும் கூட அரசின் இபோர்ட்டல் வழியாக தங்களுடைய பொருட்களை விற்க முடியும். இப்போது தேசம் மாறிவருகிறது, பழைய வழிமுறைகளும் மாறி வருகின்றன. இதுதான் புதிய இந்தியா” என்று அவர் பேசினார்.
சுவாமி சிவானந்தாவின் வயது..
சுவாமி சிவானந்தாவுக்கு கடந்த வாரம் பத்ம விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து மோடி பேசும்போது, ‘‘சுவாமி சிவானந்தாவுக்கு 126 வயதாகிறது. ஆனால், அவரிடம் வெளிப்படும் சுறுசுறுப்பு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. அவருடைய வயதும், அவருடைய உடல் நலமும்தான் தற்போது நாட்டின் பேசு பொருளாக உள்ளது. வயதில் நான்கு மடங்கு இளையவர்களை விட அவர் ஆரோக்கியமாக இருக்கிறார். காலை 3 மணிக்கே எழுந்து தவறாமல் யோகா செய்கிறார். அவரது வாழ்வு நம் அனைவருக்கு ஊக்கம் அளிக்கக் கூடியது’’ என்றார்.
– பிடிஐ