அன்னவாசல் அருகே கண்மாய் புதருக்குள் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்திய மூன்று மலைப்பாம்புகளை தீயணைப்புத் துறையினர் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி லாவகமாக பிடித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள விஷலூர் விஷலி கண்மாய் கரையில் உள்ள முட்புதருக்குள் மூன்று மலைப் பாம்புகள் சுற்றித் திரிவதை பார்த்த அப்பகுதி விவசாயிகள் இதுகுறித்து உடனடியாக இலுப்பூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த இலுப்பூர் தீயணைப்புத் துறையினர் மலைப் பாம்புகளை பிடிக்கும் கருவிகளைக் கொண்டு இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி மூன்று மலைப்பாம்புகளையும் பிடித்தனர்.
தீயணைப்புத் துறையினர் போராடி பாம்பு பிடித்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது. இதன் பின்னர் பிடிக்கப்பட்ட மலைப்பாம்புகள் குறித்து வனத் துறையினருக்கு தகவல் கொடுத்து அவர்கள் மூலம் அந்த பாம்புகளை நார்த்தாமலை காப்புக் காட்டுக்குள் கொண்டு சென்று விட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் இலுப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மலைப்பாம்புகள் சமீபகாலமாக அதிகமாக சுற்றித்திரிவதால் பொதுமக்களும் விவசாயிகளும் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் மலைப் பாம்புகளின் பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி பொது மக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM