உக்ரைனில் முடிவுக்கு வராத போர்.. இந்தியா வரும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்!

உக்ரைன் போர் ஒரு மாதத்துக்கு மேலாக தொடரும் நிலையில், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போருக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், ரஷ்யா மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கின்றன. ஆனால், இந்தியாவை பொறுத்தவரை உக்ரைன் போர் விவகாரத்தில் நடுநிலைமையை பேணி வருகிறது.
image
இந்தியாவின் இந்த நடுநிலைத் தன்மை, ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாடாக சர்வதேச அளவில் பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்தியாவுக்கு வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தியா வரும் அவர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தடைகளை மீறி இந்தியாவுக்கு ரஷ்யா எரிவாயு விற்பனை செய்து வருவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
image
அமெரிக்க டாலரை தவிர்த்து, ரஷ்ய செலாவணியான ரூபிள் மற்றும் இந்திய ரூபாய்கள் மூலமாக வர்த்தகம் நடத்துவது குறித்தும் ஆலோசனைகள் நடைபெறவுள்ளன.
போர் விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு தொடர்பான சாதனங்களை ரஷ்யாவிடமிருந்து விலைக்கு வாங்க இந்தியா பல்வேறு ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது. எனவே, இதுகுறித்த விவாதமும் பேச்சுவார்த்தையில் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.