கீவ்-உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள அணுசக்தி ஆய்வு மையத்தின்மீது ரஷ்ய ராணுவம் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ஒரு மாதத்திற்கும் மேலாக, ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவ மனைகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றைஏவுகணைகள் வீசி தகர்த்து வருகின்றனர்.கட்டடங்கள் சேதம்நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கார்கிவில், போர் துவங்கியது முதல், தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இங்குள்ள அணுசக்தி ஆய்வு மையத்தின்மீது ஏற்கனவே குண்டுகள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில், அங்குள்ள கட்டடங்கள் சேதமடைந்தன.
எனினும் அதில் இருந்து கதிர்வீச்சு எதுவும் அப்போது வெளிவரவில்லை.இந்நிலையில் நேற்று மீண்டும் அந்த அணுசக்தி ஆய்வு மையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.இதை உக்ரைன் நாட்டின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் நேற்று உறுதிபடுத்தி உள்ளது.அங்கு தொடர்ந்து குண்டுமழை பொழிவதால், அந்த மையத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
இதற்கிடையே நேற்று முன்தினம் அண்டை நாடான போலந்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வந்திருந்தபோது, உக்ரைன் – போலந்து எல்லையில் அமைந்துள்ள லீவ் நகரில் இரண்டு ஏவுகணைகளை வீசி ரஷ்ய ராணுவத்தினர்தாக்குதலை அரங்கேற்றி உள்ளனர்.ஐந்து பேர் காயம்முதல் ஏவுகணை லீவ் நகரின் புறநகரில் தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதிகளில் வீசப்பட்டு உள்ளது.அதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
இரண்டாவது ஏவுகணையால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் குறித்து தெரிய வரவில்லை. இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தஞ்சமடைந்துள்ள லீவ் நகரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.’நாட்டை பிளவுபடுத்த திட்டம்’உக்ரைன் ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு தலைவர் கிரிலோ புடானோவ் நேற்று கூறியதாவது:உக்ரைன் தலைநகரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, அரசை அகற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் முயற்சி தோல்வியை சந்தித்துள்ளது.
எனவே, நாட்டை பிளவுபடுத்த புடின் திட்டமிட்டுள்ளார். புடினுக்கு, உக்ரைன் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியத்தை, ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்பதே ஒரே நோக்கம். கொரியாவைப் போல், இந்த பகுதிகளை உக்ரைனில் இருந்து பிரிக்க திட்டமிட்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.அமெரிக்க அதிபர் ஆவேசம்ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் துவங்கியது முதல், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக சாடி வருகிறார்.
இந்நிலையில் நேற்று ஜோ பைடன் கூறுகையில், “ஆட்சி அதிகாரத்தில் விளாடிமிர் புடினால் இனி இருக்க முடியாது; அவர் கசாப்புக் கடைக்காரர் போல் செயல்படுகிறார்,” என்றார். இது குறித்து ரஷ்ய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரஷ்யாவில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை அமெரிக்கா முடிவு செய்ய முடியாது. ரஷ்ய மக்கள் தான், புடினை அதிபராக தேர்வு செய்துள்ளனர்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.