திருவனந்தபுரம்: ஒன்றிய அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தினர் நடத்தும் 48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தால் கேரளாவில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பஸ்கள், ஆட்டோக்கள் உள்பட எந்த வாகனங்களும் ஓடவில்லை. கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். வேலை நேரத்தை 12 மணிநேரமாக மாற்றக்கூடாது என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் இன்று முதல் 48 மணிநேர வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளன.ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெறும் இந்தப் போராட்டத்தில் பாஜவின் பிஎம்எஸ் தொழிற்சங்கம் தவிர சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐடியுசி உள்பட அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்துகொண்டுள்ளன. அதன்படி நேற்று நள்ளிரவு 12 மணியளவில் தொடங்கிய இந்தப் போராட்டம் நாளை நள்ளிரவு 12 மணி வரை நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தால் கேரளாவில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் பஸ்கள், ஆட்டோ, டாக்சிகள், லாரிகள் உள்பட எந்த வாகனங்களும் ஓடவில்லை. இதனால் வெகு தொலைவில் இருந்து ரயில்கள், விமானங்களில் வந்தவர்கள் தங்களது வீடுகள், அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.இதேபோல் ஓட்டல்கள், கடைகள், வணிக வளாகங்கள் உள்பட அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளன. சினிமா தியேட்டர்களும், வங்கிகளும் மூடப்பட்டு உள்ளன. அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது. பள்ளி, கல்லூரிகள் உள்பட கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. ஒன்றிய அரசைக் கண்டித்து திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு உள்பட பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் கண்டனப் பேரணி நடத்தினர். இதில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.