ஒரு ரூபாய் நாணயங்களை கொடுத்து மோட்டார் சைக்கிள் வாங்கிய வாலிபர்

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. பட்டதாரி இளைஞரான இவர் மக்களிடம் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டார். இவருக்கு நீண்ட நாட்களாக ஒரு பைக் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
ரூ.2.60 லட்சத்துக்கு ஒரு ரூபாய் நாணயங்களை மட்டுமே கொடுத்து பைக் வாங்க திட்டமிட்டார். இதற்காகச் சில்லறை நாணயங்களை முதலில் பூபதி சேமித்து வந்தார். ரூ.10 ஆயிரம் வரை சில்லறை நாணயங்களை சேமிக்க முடிந்தது.
மீதம் கையில் இருந்த பணத்தை பழனி உள்ளிட்ட பெரிய கோவில்களில் கொடுத்து அதை சில்லறையாக மாற்றினார். இந்த சில்லறைப் பணத்தை கொண்டு, ஒரு ரூபாய் நாணயங்களை மட்டுமே ரூ.2.60 லட்சத்திற்குச் சேமித்து பைக் வாங்கினார்.
இதற்காக கிட்டத்திட்ட 2 வருடங்கள் வரை சில்லறை நாணயங்களை சேமித்து வந்துள்ளார். பின்னர் பைக் வாங்குவதற்கு தேவையான பணம் கிடைத்தை அடுத்து பைக் ஷோரூமில் ரூ.2.60 லட்சத்திற்கு சில்லறை நாணயங்களை கொடுத்தார்.
இதைப்பார்த்து ஊழியர்கள் ஆச்சரியப்பட்டு, முதலில் பணத்தை வாங்க மறுத்தனர். பின்னர், இந்த அனைத்து நாணயங்களும் தனக்குச் சொந்தமானது என கூறிய பிறகே பூபதிக்கு பைக் கொடுக்கப்பட்டுள்ளது.
மக்களிடம் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், தனது சேனலில் சுவாரசியமான வீடியோவை வெளியிட வேண்டும் என்பதற்காகவும் இவர் இப்படி செய்ததாக பூபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ஒரு ரூபாய் நாணயங்களை மட்டுமே கொடுத்து பைக் வாங்க வருடமாக பணம் சேர்த்துக்கொண்டு இருந்தேன். குறிப்பிட்ட மாடல் பைக் வாங்க வேண்டும் என்று ஆசை இருந்தது.
தொடக்கத்தில் சேமித்த போது 10 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறைகள் இருந்தது. மற்ற பணத்திற்கு ரூபாய் நோட்டுகள் இருந்தது. நான் பைக் வாங்க நினைத்த போது அதன் விலை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஆக உயர்ந்துவிட்டது. யாரிடமும் காசு கேட்க கூடாது என்று நானாக முயன்று இந்த பணத்தை சேமித்தேன். பைக் ஷோரூமில் சில்லறைகளை கொடுத்து வாங்க வேண்டும் என்று யோசித்தேன்.
இதனால் தினமும் பல நூறு கிலோ மீட்டர்கள் சென்று கோவில்களுக்கு போய் சில்லறைகளை பெற்றேன். பணத்தை கொடுத்து பழனி உள்ளிட்ட பெரிய கோவில்களில் இருக்கும் உண்டியல்களில் இருந்து சில்லறைகளை மாற்றினேன். இதன் மூலம் முழுக்க முழுக்க ஒரு ரூபாய் காயின்களாக மாற்றி பைக் வாங்கி இருக்கிறேன். முதலில் பைக் ஷோரூமில் இதை யாரும் நம்பவில்லை.
அதன்பின் இது சேமித்த காசுதான். என்னிடம் இதற்கான ஆதாரங்கள் உள்ளது என்று கூறிய பின் பைக் ஷோரூமில் ஏற்றுக்கொண்டனர். என் நண்பர்கள், நான், பைக் ஊழியர்கள் சேர்ந்து பணத்தை எண்ணினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே பூபதி சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் இந்த விவரங்களை வீடியோவாக வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.