கிரையோஜெனிக் இயந்திரத்தின் எரிபொருள் கலனில் ஏற்பட்ட கசிவால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்எல்வி-எப்10 ராக்கெட் ஏவுதல் திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது.
புவிகண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்புக்காக இஓஎஸ்-03 (ஜிஐசாட்) என்ற நவீன ‘ஜியோ இமேஜிங்’ செயற்கைக் கோளை, ஜிஎஸ்எல்வி- எப்10 ராக்கெட் மூலம் இஸ்ரோ கடந்த 2021 ஆக.12-ம்தேதி விண்ணில் செலுத்தியது. அப்போது ராக்கெட்டின் இறுதி பகுதியான கிரையோஜெனிக் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் அத்திட்டம் தோல்வியில் முடிந்தது.
இதுகுறித்து ஆய்வு செய்யஉயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு சமர்ப்பித்த அறிக்கை விவரங்களை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
கிரையோஜெனிக் இயந்திரம் என்பது செயற்கைக் கோளை உரிய சுற்றுப்பாதையில் உந்தி தள்ள பயன்படும் அமைப்பு. இதில் ஹைட்ரஜன் (மைனஸ் 253), ஆக்சிஜன் (மைனஸ் 183) ஆகிய வாயுக்கள் மிக குறைந்த வெப்பநிலையில் குளிரூட்டப்பட்டு திரவங்களாக மாற்றி தனித்தனி கலனில் வைக்கப்பட்டிருக்கும். இந்த 2 திரவங்களும் ஒன்றிணைக்கப்படும்போது வாயுவாக மாறி,அதிக உந்துசக்தியை வெளிப்படுத்தும். ஜிஎஸ்எல்வி-எப்10 ராக்கெட்ஏவுதலின்போது வெப்பநிலை, மாசு போன்ற புறக்காரணிகளால் ஆக்சிஜன் கலனில் இருந்த வால்வில் கசிவு ஏற்பட்டுவிட்டது. இதனால் அந்த கலனில் இருந்துஅதிக அளவு அழுத்தம் வெளியேறிவிட்டது. தேவைக்கேற்ப அழுத்தம் இல்லாததால் இயந்திரத்துக்கு எரிபொருள் விநியோகம் சீராக கிடைக்கவில்லை.
அதனால் கிரையோஜெனிக் எதிர்பார்த்தபடி செயலாற்றவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-04 (ரிசாட்-1ஏ), இன்ஸ்பயர் சாட்-1, ஐஎன்எஸ்-2டிடி ஆகிய 3 வகையான செயற்கைக் கோள்கள் கடந்த பிப்.14-ம்தேதி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. அந்த செயற்கைக் கோள்கள் எடுத்த புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.