பெங்களூரு,
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் அரசியல் செயலாளரும், பா.ஜனதா எம்.எல்.ஏ.வுமான ரேணுகாச்சார்யா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் மதரசாக்களில் நமது தொலைநோக்கு பார்வை குறித்த கொள்கைகள், நமது நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த தலைவர்கள் குறித்து கற்பிப்பது இல்லை. அவர்கள் இஸ்லாமிய கொள்கைகளை மட்டுமே கற்பிக்கிறார்கள். சமூக விரோத செயல்கள் குறித்து கற்பிக்கிறார்கள். இது அங்கு படிக்கும் அப்பாவி குழந்தைகளின் மனதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அதனால் மதரசாக்களுக்கு தடை விதிக்க வேண்டும். அரசு பள்ளிகளை நடத்தவில்லையா?. அங்கு பாடங்கள் கற்பிக்கப்படுவது இல்லையா?. நாம் அவற்றை செய்கிறோம். மதரசாக்களில் தொலைநோக்கு பார்வை மற்றும் நமது தலைவர்களின் தியாகம் குறித்து கற்பித்தால் அதை நான் வரவேற்பேன். சித்தராமையா தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியில் மதரசாக்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்து ஆன்மிக தலங்கள் மற்றும் மடங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. இவ்வாறு ரேணுகாச்சார்யா கூறினார்.