நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 5 மாநிலங்களிலும் தோல்வியடைந்து மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது காங்கிரஸ் கட்சி. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றபோது கூட, கங்கிராஸ் இனி பிராந்திய கட்சியாக மாறும் என்று ஆம் ஆத்மி தலைவர் ஒருவர் கூறியிருந்தார். காங்கிரஸின் சரிவு குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், “காங்கிரஸ் வலுவாக இருக்க வேண்டும் என்று நான் முழு மனதுடன் வாழ்த்துகிறேன். தோல்வியடைந்தால், வெற்றியும் ஒரு நாள் உண்டு” என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக லோக்மத் பத்திரிகை விருது வழங்கும் விழாவில் பேசிய நிதின் கட்கரி, “ஜனநாயகம் என்பது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எனும் இரண்டு சக்கரங்களில் இயங்குகிறது. ஜனநாயகத்திற்கு வலுவான எதிர்க்கட்சி தேவை. காங்கிரஸ் பலவீனமடைந்துள்ள நிலையில், பிராந்தியக் கட்சிகள் காங்கிரஸ் இடத்தைப் பிடிக்க முயல்கின்றன. ஜனநாயகத்திற்கு இது நல்லதல்ல. எனவே எதிர்க்கட்சிகள் வலுவாக இருக்க வேண்டும். காங்கிரஸ் வலுவாக இருக்க வேண்டும் என்று நான் முழு மனதுடன் வாழ்த்துகிறேன். காங்கிரஸ் சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்கள் கட்சியில் நிலைத்திருந்து தங்கள் நம்பிக்கையை கடைப்பிடிக்க வேண்டும்.
அவர்கள் தொடர்ந்து உழைக்க வேண்டும், தோல்வியைக் கண்டு விரக்தியடையாமல் இருக்க வேண்டும். தோல்வியடைந்தால், வெற்றியும் ஒரு நாள் உண்டு. ஜவஹர்லால் நேரு இதற்கு ஒரு உதாரணம். மக்களவைத் தேர்தலில் அடல் பிஹாரி வாஜ்பாய் தோல்வியடைந்தபோது, நேரு அவருக்கு மரியாதை அளித்தார். எனவே, ஜனநாயகத்தில், எதிர்க்கட்சிகளின் பங்கு மிகவும் முக்கியமானது” என கூறினார்.