லாஸ்ஏஞ்சல்ஸ்: நான் ஆஸ்கர் அகாடமியிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என விழா மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளரை கன்னத்தில் ஓங்கி அறைந்த நடிகர் வில் ஸ்மித் கூறியுள்ளார்.
94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த ஆண்டு இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர், ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
தொகுப்பாளரும் நகைச்சுவை நடிகருமான கிறிஸ் ராக், சிறந்த நடிகருக்கான பரிந்துரைக்கப்பட்ட வில் ஸ்மித்தின் மனைவியான நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித்தைப் பற்றி நகைச்சுவையாகப் பேசினார்.
விருதை வழங்கும்போது, பிங்கெட் ஸ்மித்தின் மொட்டையடிக்கப்பட்ட தலையைப் பற்றி ராக் கூறி கிண்டல் செய்தார். ஆரம்பத்தில் சிரித்துக்கொண்டிருந்த வில் ஸ்மித், ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாமல் மேடைக்கு ஏறி வந்தார். அப்போது, தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு கீழே இறங்கிச் சென்றார். இந்த காட்சியை சமூகவலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில் விருது பெற்ற வில் ஸ்மித் பேசியதாவது:
நான் ஆஸ்கர் அகாடமியிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். எனது சக நாமினிகள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். இது ஒரு அழகான தருணம், விருதை வென்றதற்காக நான் அழவில்லை. இது எனக்கு விருது வெல்வதற்காக அல்ல. இது மக்கள் அனைவருக்கும் ஒரு ஒளியைப் பிரகாசிக்கச் செய்வதாகும். நாம் கலையை நேசிக்கிறோம். ரிச்சர்ட் வில்லியம்ஸைப் பற்றி அவர்கள் கூறியது போல் நான் பைத்தியக்கார தந்தையைப் போல் இருக்கிறேன். காதல் உங்களை பைத்தியக்காரத்தனமான செயல்களைச் செய்ய வைக்கும்.
மக்களை நேசிக்கவும், மக்களைப் பாதுகாக்கவும், என் மக்கள் பயணம் செய்யும் ஒரு நதியாக இருக்கவும் என் வாழ்க்கையில் நான் விரும்புகிறேன். நாம் செய்வதையே எனக்கும் செய்யத் தெரியும். மக்கள் உங்களைப் பற்றி பைத்தியமாக பேசுவதற்காக நீங்கள் நடிக்க வேண்டும். இந்த தொழிலில் உங்களை அவமரியாதை செய்யும் நபர்களும் இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் சிரிக்க வேண்டும், அது சரி என்பது போல் நடிக்க வேண்டும். இது தான் நமது தொழிலின் முன் உள்ள சவால்.
இவ்வாறு அவர் கூறினார்.