புதுடெல்லி: கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க வேண்டும் என திமுகவை சேர்ந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் அதில் ஒரு விரிவான எந்த உத்தரவையும் பிறப்பிக்காமல் தீர்ப்பாயம் வழக்கை முடித்து வைத்திருந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பால சுப்ரமணியம் மற்றும் ராம் சங்கர் ஆகியோர், ‘‘உயிர் சூழல் மண்டலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. இதில் வனவிலங்கு சரணாலயம், தேசிய பூங்கா மற்றும் காப்பு காடுகள், சோலை மரக்காடுகள், அரிய வகை விலங்குகள், பறவைகள், ஊர்வன மற்றும் தாவரங்கள் அதிகளவில் உள்ளன. கடந்த பல வருடங்களாகவே இந்த மலைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் அழிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. அதனால் கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். இந்த விவகாரத்தில் கஸ்தூரி ரங்கன் மற்றும் காட்கில் ஆகியோர் கமிட்டி வழங்கிய பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மேலும் மலைகளை பாதுகாக்க மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு போதிய நிதி உதவிகளை செய்து கொடுக்க வேண்டும். மலைகளில் சட்ட விரோதமான சுரங்கள் அமைக்க தடை விதித்து, அதனை கண்கானிக்கும் விதமாக நிரந்தரமாக ஒரு கட்டமைப்பு குழுவை உருவாக்க வேண்டும்’’ என்று வாதாடினர். வாதங்களை பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள், ‘‘கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விவகாரத்தில் ஒன்றிய அரசு மற்றும் மலைகள் அடங்கியுள்ள தமிழகம், கோவா, கர்நாடகா, குஜராத் உட்பட எட்டு மாநிலங்கள் பதிலளிக்க வேண்டும்’’ என்று நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.