திருவனந்தபுரம்:
மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2 நாள் முழு வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.
அதன்படி கேரளாவில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இன்று அதிகாலை முதல் அரசு பஸ்கள் எதுவும் ஓடவில்லை. இதனால் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் போக்குவரத்து முழுமையாக முடங்கியது.
இதுபோல மாநிலம் முழுவதும் உள்ள பெரும் பாலான வர்த்தக நிறுவனங்கள் மூடிக்கிடந்தன. பஸ், கார்கள் ஓடவில்லை என்றாலும் ரெயில்கள் வழக்கம் போல ஓடியது. விமான சேவையும் நடந்தது. இதனால் வெளியூர்களில் இருந்து கேரளா வந்த பயணிகள் அங்கிருந்து வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
முழு அடைப்பு போராட்டத்தை யொட்டி கேரளாவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
மேலும் இந்த நாட்களில் நடக்க இருந்த தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டன. பாங்கிகளிலும் குறைந்த அளவே பணியாளர்கள் வந்திருந்தனர். இதனால் அங்கும் பணிகள் பாதிக்கப்பட்டது.