கோலாகலமாகத் தொடங்கியது போர்க்களம் கால்பந்து தொடர்… முதல் வாரத்தில் 14 கோல்கள்!

தமிழகக் கால்பந்து அரங்கின் மிகப்பெரிய முயற்சியான போர்க்களம் கால்பந்துத் தொடர் சென்னை நேரு மைதானத்தில் இந்த வாரம் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த 8 அணிகள் கலந்துகொள்ளும் இந்தத் தொடர், மே இறுதி வரை நடக்கவிருக்கிறது.

தமிழகக் கால்பந்தின் மிகமுக்கிய தொடரான சென்னை லீக் கடந்த சில ஆண்டுகளாக நடப்பதில்லை. அதனால், பெரும்பாலான வீரர்கள் தங்கள் கால்பந்து கரியரைத் தொடர முடியாமல் தடுமாறிவருகின்றனர். அடுத்த தலைமுறையைச் சேர்ந்த வளர்ந்து வரும் வீரர்களும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். கால்பந்தை மீட்டெடுக்கப் பல முயற்சிகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், ‘ஃபுட்பால் மக்கா’ என்ற இளைஞர்கள் குழு ஒரு மிகப்பெரிய முன்னெடுப்பைக் கையில் எடுத்திருக்கிறது. அமெச்சூர் வீரர்களுக்காக ‘போர்க்களம்’ என்ற கால்பந்து தொடரை நடத்திக்கொண்டிருக்கிறது இந்தக் குழு.

12 அணிகள் தகுதிச் சுற்றில் கலந்துகொள்ள, அதிலிருந்து 8 அணிகள் இத்தொடருக்கு முன்னேறியிருக்கின்றன. லீக் சுற்றில், 8 அணிகளும் மற்ற அணிகளோடு தலா 1 முறை மோதும். ஐ.எஸ்.எல் தொடரைப் போல் லீகை வெல்லும் அணிக்கு ஷீல்ட் வழங்கப்பட்டு, நாக் அவுட் போட்டிகளும் நடக்கும். இறுதிப் போட்டி முடிந்த பிறகு என்.பி.ஏ தொடரைப் போல் ஆல் ஸ்டார் போட்டியும் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு தினங்களில் லீக் போட்டிகள் நடைபெறுகின்றன.

கடந்த சனிக்கிழமை நேரு ஸ்டேடியத்தில் மிகவும் சிறப்பான முறையில் தொடங்கியது இந்தத் தொடர். ஒரு பெரிய தொழில்முறை லீக் எப்படி நடத்தப்படுமோ அதுபோல் அனைத்து திட்டமிடலும் செய்யப்பட்டிருந்தது. வீரர்களுக்கும் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு, சிறப்பாகத் தொடங்கியது இந்தத் தொடர். ஃபிஃபா நடுவர் ரூபாதேவியோடு, ஐ.எஸ்.எல், ஐ-லீக் தொடர்களில் நடுவர்களாகச் செயல்பட்ட நடுவர்களும் இத்தொடரில் பயன்படுத்தப்படுகின்றனர். தமிழ்நாடு வுமன்ஸ் லீக் தொடரை நேரலையில் ஒளிபரப்பிய ஃபுட்பால் மக்கா, இந்தத் தொடரையும் தங்கள் யூ-டியூப் சேனலில் நேரலையில் ஒளிபரப்பினர். தமிழ் வர்ணனையோடு!

சனிக்கிழமை நடந்த முதல் போட்டியில் யாவே எஃப்.சி அணியும் ஃப்யூச்சர் இந்தியா ஃபுட்பால் அகாடமியும் மோதின. ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்திலேயே கோலடித்து, போர்க்களத்தை வாணவேடிக்கையோடு தொடங்கிவைத்தார் யாவே எஃப்.சி ஸ்டிரைக்கர் ஞான பிரசாத். வலது விங்கில் இருந்து வந்த அற்புதமான கிராஸை, சிறப்பாக கன்ட்ரோல் செய்து கோலாக்கினார். அதன்பிறகு இரு அணிகளும் பல முயற்சிகள் மேற்கொண்ட போதும் இன்னொரு கோல் அடிக்க முடியவில்லை. அதனால் 1-0 என வெற்றியோடு சீசனைத் தொடங்கியது யாவே எஃப்.சி.

YFC vs FIFA

இரண்டாவது போட்டியில் வோல்ஃப் பேக் எஃப்.சி அணி, 5 – 0 என எஃப்.சி.ரெவலேஷனை எளிதாக வீழ்த்தியது. லோகேஷ் அடித்த இரண்டு கோல்களால் முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்றது வோல்ஃப் பேக் எஃப்.சி. 53-வது நிமிடத்திலும், 83-வது நிமிடத்திலும் கோலடித்து, அந்த அணியின் முன்னிலையை நான்காக உயர்த்தினார் ஆதில். எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்திருந்த நிலையில், 89-வது நிமிடத்தில் ஐந்தாவது கோலை அடித்தார் சூரஜ் குமார். ஆட்டம் 5-0 என முடிவுக்கு வந்தது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில், YMSC அணி 2-1 என MAFFC அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியின் மூன்று கோல்களுமே பெனால்டிகளிலிருந்து வந்தவையே. 11-வது நிமிடத்தில் MAFFC அணிக்கு அஜித் குமார் முன்னிலை ஏற்படுத்திக்கொடுக்க, 67-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியை கோலாக்கி ஆட்டத்தைச் சமனாக்கினார் YMSC வீரர் கீர்த்தி மோகன். போட்டி 1-1 என இருந்த நிலையில், 89-வது நிமிடத்தில் YMSC-க்கு இன்னொரு பெனால்டி கிடைத்தது. அதை கோலாக்கி அந்த அணிக்கு 3 புள்ளிகளைப் பரிசளித்தார் மனோஜ்.

Noble Football Academy

இந்த வாரத்தின் கடைசிப் போட்டியில் தடம் எஃப்.சி, நோபிள் கால்பந்து அகாடமியை எதிர்கொண்டது. ஆறாவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார் நோபிள் வீரர் ஏபி. 41-வது நிமிடத்தில் அருண் அடித்த கோல் மூலம் அந்த அணிக்கு இரண்டாவது கோலும் கிடைத்தது. 2-0 என முதல் பாதி முடிய, இரண்டாவது பாதியின் மூன்றாவது நிமிடத்திலேயே மூன்றாவது கோலை அடித்தார் ஃபாத்திமா அஷ்வின். முழுக்க முழுக்க நோபிள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்க, 71-வது நிமிடத்தில் தடம் அணி முதல் கோலை அடித்தது. அந்த கோலை அடித்தவர் கலாநிதி. 84-வது நிமிடத்தில் நோபிள் அணிக்கு நான்காவது கோலை அடித்தார் அந்த அணியின் விஜய். இறுதியில் 4-1 என வெற்றி பெற்றது நோபிள் அகாடெமி.

புள்ளிப் பட்டியலில் வோல்ஃப் பேக் எஃப்.சி முதலும், நோபிள் கால்பந்து அகாடமி இரண்டாவது இடமும் பிடித்திருக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.