சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது கொடுமை. இக்குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் விரைவில் கைது செய்து சட்டத்திற்கு உட்பட்டு அதிகபட்ச தண்டனை கிடைக்க தமிழக அரசு துரித நடவடிக்கையை அவசர நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ஐ.ஐ.டி வேதியியல் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு காலத்தே உரிய நீதி கிடைக்க வேண்டும். இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஐ.ஐ.டி யில் பல மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்பதால் படிக்கும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்து கொள்ள வேண்டியது கல்வி நிறுவனத்தின் கடமை.
கடந்த 2017ம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னை ஐ.ஐ.டி யில் வேதியியல் துறையில் ஆராய்ச்சி பட்ட மேற்படிப்பு படித்து வந்த போது உடன் படித்த மாணவர் பாலியல் தொந்தரவு கொடுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் இக்கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தண்டனைக்கு ஆளாகியிருக்க வேண்டும். ஆனால் இப்பிரச்சனைக்கு உரிய நீதி இன்னும் கிடைக்கவில்லை என்பது வேதனைக்குரியது.
உளவியல் ரீதியாகக் கடும் மன அழுத்தத்துக்கு ஆளான அந்தப் பெண், 2020-ல் ஐ.ஐ.டி உள்புகார் கமிட்டியில் பாலியல் தொந்தரவு கொடுத்தவர்கள் மீது புகார் மனு அளித்தார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க துணை நிற்க வேண்டிய பொறுப்பு கல்வி நிறுவன பேராசிரியர்களுக்கும், கல்வி நிறுவனத்தின் தலைமைக்கும் உண்டு.
இந்த வன்கொடுமை சம்பந்தமாக மாணவி பாதிக்கப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தும் இன்னும் இதில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட மற்ற அனைவரையும் கைது செய்யாமல், சட்டத்தின் முன் நிறுத்தாமல், தண்டனை பெற்றுக்கொடுக்காமல் பிரச்சனை நீடிப்பது ஏற்புடையதல்ல.
பாலியல் வன்கொடுமை என்ற குற்றச்செயலில் ஈடுபட்டவர் மாணவராக இருந்தாலும் சரி, பேராசிரியராக இருந்தாலும் சரி, இவர்களை காப்பாற்ற துணை நிற்க யார் முயன்றாலும் சரி அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை ஐ.ஐ.டி யில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு கிடைக்கும் நீதியும், குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள், அவர்களை காப்பாற்ற நினைத்தவர்கள் ஆகியோருக்கு கிடைக்கும் தண்டனையும் இனிமேல் இது போன்ற ஒரு சம்பவம் தமிழகத்தில் எங்கும் நடைபெறக்கூடாது என்பதற்கேற்ப தமிழக அரசு துரித நடவடிக்கையை விரைவு நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.