புனே: ஜனநாயகத்தில் எதிர்கட்சி வலுவாக இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருப்பது நல்லதல்ல என்று ஒன்றிய பாஜக அமைச்சர் நிதின் கட்கரி கருத்து தெரிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான நிதின் கட்கரி, புனேயில் நடைபெற்ற பத்திரிகை விருது விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ‘தேசிய அரசியல்வாதியான நான், மாநில அரசியலுக்கு (மகாராஷ்டிரா) திரும்புவதில் எனக்கு ஆர்வம் இல்லை. ஒரு காலத்தில் தேசிய அரசியலுக்கு செல்ல எனக்கு விரும்பவில்லை. ஆனால் இப்போது அங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை. காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்க வேண்டும். மாநில கட்சிகள் எதிர்கட்சிகளாக மாறுவதை தடுக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் மீதான நம்பிக்கையைக் காப்பாற்றி, அவர்களின் சொந்தக் கட்சியிலேயே இருக்க வேண்டும். அவர்கள் தொடர்ந்து உழைக்க வேண்டும். தோல்வியைக் கண்டு சோர்ந்துவிடக் கூடாது. ஒவ்வொரு கட்சிக்கும் உரிய காலம் வரும்; ஆனால் அதற்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும். ஜனநாயகத்துக்கு எதிர்க்கட்சி வலுவாக இருப்பது அவசியம். காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருப்பது இந்திய ஜனநாயகத்துக்கு நல்லதல்ல; அந்த இடத்தை மாநில கட்சிகள் கைப்பற்றுவது நல்ல அறிகுறியல்ல. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் லோக்சபா தேர்தலில் (1950களில்) தோல்வியடைந்தாலும் கூட, அவருக்கு நேருவிடம் மரியாதை இருந்தது.அதனால்தான் ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் முக்கிய இடத்தை பெற்றது. காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்க வேண்டும் என்பதே எனது மனமார்ந்த விருப்பம். மஹாராஷ்டிராவை பொருத்தமட்டில் பல்வேறு சித்தாந்தங்கள், கண்ணோட்டம் கொண்டவர்கள் இணைந்து வாழும் பாரம்பரியம் உள்ளது. மாநில அரசியல் கலாசாரத்திற்கு தீங்கிழைக்கும் எவ்வித அரசியலையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இன்று சந்தர்ப்பவாத அரசியல் (மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி) நடக்கிறது’ என்றார்.