டெல்லியில் புதியதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தின் திறப்புவிழாவை திமுக பிரம்மாண்ட அரசியல் நிகழ்ச்சியாக நடத்த திட்டமிட்டு வருகிறது. டெல்லி அலுவலகத் திறப்பு விழாவுக்கு திமுக அமித்ஷாவுக்கு மட்டுமல்ல அதிமுகவுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடந்த முறை டெல்லி சென்றபோது டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தின் கட்டுமாணப் பணிகளை பார்வையிட்டார். அண்மையில் நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து, பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க திமுக தனது டெல்லி அலுவலக திறப்பு விழாவை திட்டமிடுவதாக தகவல்கள் வெளியானது.
நாடாளுமன்றத்தில் மக்களவை அதிக உறுப்பினர்களைக் கொண்ட 3வது பெரிய கட்சியான திமுக, டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத் திறப்பு விழாவை தலைநகரில் பிரம்மாண்ட அரசியல் நிகழ்ச்சியாக நடத்த திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. திமுகவின் டெல்லி அலுவலகத் திறப்பு விழா ஏப்ரல் 2ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. திமுக அலுவலகத் திறப்பு விழாவுக்கு திமுகவின் கருத்தியல் எதிரியான பாஜக உட்பட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. திமுகவின் இந்த நடவடிக்கை தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் தேசிய அரசியலிலும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இது குறித்து திமுக பொருளாளரும் நாடளுமன்ற திமுக மக்களவைத் தலைவருமான டி.ஆர்.பாலு, இதுவரை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, அனைத்து மத்திய அமைச்சர்கள் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் எங்கள் எம்பிக்கள் அழைப்பு விடுத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
திமுக அலுவலகத் திறப்பு விழாவுக்கு பாஜகவுக்கு அழைப்பு விடுத்துள்ளதை திமுகவின் உத்தியாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வுக்கு விலக்கு கோரிய சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக டெல்லி சென்ற தமிழக எம்.பி.க்கள் குழுவை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க மறுத்ததாக செய்திகள் வெளியானது. ஆனால், டெல்லி திமுக அலுவலகத் திறப்பு விழாவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திமுக அழைத்துள்ளது. இது திமுகவின் அரசியலும் நட்பும் வேறு வேறு என்பதாக தெரிவிக்கின்றனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, மு.க. ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ புத்தகம் வெளியீட்டு விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை அழைத்திருந்தது.
திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும் நிலையில், திமுக தரப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது குறித்து திமுக வட்டாரங்கள் கூறுகையில், திமுக டெல்லி அலுவலகத் திறப்பு விழாவுக்கு அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். இது அரசியல் மரியாதை நிமித்தமான அழைப்பு. அனைத்து தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் தலைவர்களுக்கான அழைப்பிதழ் அந்தந்த எம்.பி.க்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தன.
திமுக டெல்லி அலுவலக திறப்பு விழாவுக்கு கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், பாஜக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் திமுக அழைப்பு விடுத்திருப்பது தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் தேசிய அரசியலிலும் கவனத்தைப் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“