கடந்த சில ஆண்டுகளாக பங்கு சந்தையில் நுழையும் புதிய நிறுவனங்களின் எண்ணிக்கையானது கணிசமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது டைட்டன், கல்யாண் ஜூவல்லர்ஸ்-க்கு போட்டியாக, கேரளாவினை சேர்ந்த ஜோஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரி நிறுவனம் பங்கு சந்தையில் காலூன்றவுள்ளது.
இதற்காக ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் பங்கு சந்தையில் பொதுப் பங்கு வெளியீடு மூலமான நிதி திரட்ட, செபியிடம் ரெட் ஹெர்ரிங் ப்ராஸொபெக்டஸை தாக்கல் செய்துள்ளது.
முகேஷ் அம்பானி ஆசை ஆசையாய் வாங்கிய 3 விஷயங்கள்..!
ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் இந்த ஐபிஓ மூலம் 2300 கோடி ரூபாய் நிதியினை திரட்ட உள்ளது.
எதற்காக நிதி திரட்டல்?
இந்த பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியானது, சுமார் 1400 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை திரும்ப செலுத்த பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு 463.9 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியினை அதன் 8 புதிய சில்லறை கடைகளை திறக்க பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இவ்வாறு ஐபிஓ மூலம் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டால், ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் டைட்டன், கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனங்களுக்கு போட்டியாக களமிறங்கும்.
நிறுவனத்தின் செயல்பாடு எப்படி?
இந்த நிறுவனம் செப்டம்பர் 2021வுடன் முடிவடைந்த அரையாண்டில் அதன் வருவாய் விகிதம் 4012.26 கோடி ரூபாயாக இருந்ததாகவும், இது முந்தைய ஆண்டில் 2088.77 கோடி ரூபாயாகவும் உள்ளது. இதற்கிடையில் நிகர லாபம் 268.95 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 248.61 கோடி ரூபாயாக இருந்தது. இதன் P/Eவிகிதம் 99.71 ஆகவும் உள்ளதாக தெரிவித்துள்ளது.
நிதி மேலாளர்கள்
இந்த பங்கு வெளியீட்டில் எடில்வைஸ் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், ஹைடாங்க் சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மோதிலால் ஆஸ்வால் இன்வெஸ்மென்ட் அட்வைசர்ஸ், எஸ்பிஐ கேப்பிட்டல் மார்கெட்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் நிதி மேலாளர்களாக இந்த வெளியீட்டில் செயல்படவுள்ளனர்.
எவ்வளவு ஒதுக்கீடு
இந்த பங்கு வெளியீட்டில் 50% பங்குகள் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கும், 15% பங்குகள் அன்னிய முதலீட்டாளர்களுக்கும், மீதமுள்ள 35% பங்குகள் சில்லறை முதலீட்டாளார்களுக்கு ஓதுக்கீடு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்னென்ன சான்றுகள்?
ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் வைர நகைகள் Forevermark, IGI, GIA மற்றும் DHC உள்ளிட்ட சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் ஆலுக்காஸ் எலிகன்சா, பிரைட், வேதா, ரத்னா, ஜெனினா, அபூர்வா, மசாக்கி, பேர்ல்ஸ் மற்றும் லில் ஜாய் கிட்ஸ் ஜூவல்லரி உள்ளிட்ட பல துணை பிராண்டுகளையும் உருவாக்கியுள்ளது.
வளர்ச்சி அதிகரிக்கும்
உலகளாவிய நகை சந்தை மதிப்பானது 320 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது உலகப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் , ஒரு முக்கிய துறையாகவும் இருந்து வருகின்றது. விலை மதிப்பற்ற நகைச் சந்தையில் தங்கம் மற்றும் வைரம் 50% பங்கு வகிக்கிறது. சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியவை நகை சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், இந்தியா முன்னணி சந்தையாகவும் இருந்து வருகின்றது. இதற்கிடையில் 2025ம் ஆண்டில் நகைச் சந்தையில் நகைச் சந்தையின் மதிப்பு 350 பில்லியன் டாலர்களை எட்டலாம் என DRPHல் கூறப்பட்டுள்ளது.
வளர்ச்சி அதிகரிக்கலாம்
இந்தியாவில் தங்கம் ஆபரணமாக மட்டும் அல்லாமல், முதலீட்டு நோக்கிலும் முதலீடு செய்யப்படுகிறது. இது நகைகள், பார்கள், நாணயங்கள் என பல வடிவில் விற்பனை செய்யப்படுகிறது. நகைக்கடைகளை பொறுத்தவரையில் நகைகளுக்கு காலாவதி தேதி என்பது இல்லை. மற்ற சில்லறை வணிகங்களை போல தள்ளுமுள்ளு இல்லை. ஒரு வேளை நகைகள் பழையன ஆகிவிட்டாலும், அதனை உருக்கி புதியதாக உருமாற்றம் செய்யலாம். மொத்தத்தில் நகைத்துறைக்கு எதிர்காலம் நன்றாக உள்ள நிலையில், இந்த நிறுவனத்தின் வளர்ச்சியும் எதிர்காலத்தில் களை கட்டலாம்.
joyalukkas files IPO papers with SEBI: will compete with Titan, Kalyan Jewellers
joyalukkas files IPO papers with SEBI: will compete with Titan, Kalyan Jewellers/டைட்டன், கல்யாண் ஜூவல்லர்ஸ் போட்டியாக களமிறங்கும் ஜோஸ் ஆலுக்காஸ்.. எப்படி தெரியுமா?